பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

361



இவ்வாறு வடக்கே திருவொற்றியூரிலும்,தெற்கே நாங்கு னேரியிலும், இடையில் சோழநாட்டு வழுவூரிலும் திருக் கோயிலில் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் நடைபெறும் திருவிழாவில் திருவாதவூரர் திருமுன் ஒதப் பெறுவது காணப்படுவதால் இத் திருவெம்பாவை, தமிழ் நாடு முற்றும் மேற்கொண்டு பராவப் பெற்ற சீர்த்தியுடையதென்பது நன்கு விளங்குகிறது.

இடைக் காலத்தில் தென் தமிழ் நாட்டிற்கும் கடாரம், சாவகம், சயாம் முதலிய கீழ்க்கடல் நாடுகட்கும் மக்கள் போக்கு வரவும், அவர் வழியாகத் தமிழ் நாட்டு வழக்கவொழுக்கங்களுட்சிலபடர்ந்தமையும் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வகையில் இத் திருவெம்பாவை தமிழ் மந்திரம் என்ற பெயரால் சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டுங் காலத்தும் லோ-ஜின்-ஜா என்ற திருவிழாக் காலத்தும் இத் திருவெம்பாவையைச் சயாம் நாட்டவர் ஒதுகின்றனர். இது "ஏலோர் எம்பாவாய்" என்று பாட்டுத்தோறும் முடிவது கண்ட சயாம் நாட்டவர் இதற்கு 'லோரிபாவாய்'[1] என்று பெயரிட்டும், திருக்கயிலாயக் கடை திறப்பு என்று பொருளுரைத்தும் தம்மிடையே மேற்கொண்டுள்ளனர். வேந்தன் முடிசூடிக் கொள்ளுங் கால் எழுகுடை நிழற்றும் பத்திரபீடம் எனப்படும் எண் கோணபீடத்தில் அவன் வீற்றிருப்பப் பிராமணர் தலைவன் முற்போந்து வேந்தனை வணங்கி நின்று திருவெம்பாவையை ஒதுவன்.[2] அச்சயாம் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களுள் திருவூசல் திருவிழா என்பது ஒன்று. இதனைத் திருவெம்பாவைத் திருப்பாவை விழா என்றும், சயாம் மொழியில் லோ-ஜின்-ஜா என்றும் கூறுகின்றனர். இத் திருவிழா நாளில் வளர்பிறைப் பக்கத்து ஏழாம் நாள் சிவபெருமான் நிலவுலகத்துக்கு வந்து தேய்பிறைப்பக்கத்து ஐந்து நாள்காறும் இருந்து விட்டு


  1. 1. Dr. H. G. Quaritch Wales of the Lord Chamberlain's Department of the Court of Siam. p. 249.
  2. 2. Ibid. p. 83.