பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

365,



னில் தேனுண்ணாதே, நினைத்தொறும் காண்டொறும் பேசுந் தொறும் எப்போதும், அனைத்தெலும்பு உள் நெக ஆனந்தத்தேன் சொரியும், குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பி [1]' என்பது இக்கருத்தே எய்தவருமாறு காணலாம். தலைவன்பால் ஒருதலைக்காமம் கொண்டு உள்ளம் மெலிந்து வருந்தும் ஒரு நங்கை, செவிலித்தாய்பால் தன் காதலன் சிறப்பைச்சொல்லி வாய்வெருவினாளாக, அதனை அவள் நற்றாய்க்கு உரைக்கும் வகையில் அமைந்தது. அன்னப்பத்து என்னும் பாட்டு. ' தையலோர் பங்கினர் தாபதவேடத்தர், ஐயம்புகுவரால் அன்னே என்னும், ஐயம் புகுந்து அவர் போதலும் என்னுள்ளம், நையும் இது வென்னே அன்னே யென்னும் ”[2] என்பது அக்கருத்தை வலியுறுத்தும், காமம் மிக்க கழி படர் நிலையில் மகளிர், வண்டுகளையும் பறவைகளையும், கடல், திங்கள் முதலியவற்றையும் எதிர் நிறுத்திச் சொல்லாடும் செயலமைந்த பாட்டுக்கள் அகப்பொருள் நெறியில் வருவதுண்டு. அவ்வாறே அடிகள், காமம் கைம்மிக்குக் கையற்று இனையும் நங்கை. யொருத்தியின் நிலையில் தம்மை வைத்து, "உன்னை உகப்பன் குயிலே உன் துனைத்தோழியுமாவன், பொன்னை யழித்த நன்மேனிப் புகழின் திகழும் அழகன், மன்னன் பரிமிசைவந்த வள்ளல் பெருந்துறை மேய, தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்[3] ' என்பது போலும் பாட்டுக்கள் பத்தும் குயிற்பத்தென்ற பெயராற்: பாடியுள்ளார்.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகப்பகுதிகள் ஆங்காங்கே சிறப்பான நிலையில் மக்களால் போற்றப்பெற்றதுடன், அவருடைய திருவுருவமும் கோயில்களில் எழுந்தருள்வித்து வழிபாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நாளில் திருஞானசம்பந்தர் முதலிய மூவருடன் திருவாதவூரரையும் சேர்த்து நால்வரையும் சமய குரவர் என்று போற்றித்


  1. 1. திருக்கோத்தும் பி. 3.
  2. 2. அன்னை. 9.
  3. 3. குயிற். 7.