பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

சைவ இலக்கிய வரலாறு


நாட்டுஅரசன் அரண்மனையில் அன்றிரவு பொன்னும் பணியும் களவுசெய்த கள்வர் சிலர் அங்கேவந்து, தாம். கவர்ந்த அணிகளுள் மதாணி யொன்றை யெடுத்து, அக் கோயிலில் நிட்டையிலிருந்த அடிகளை அக் கோயிலில் இருந்த தெய்வமாகப் பிறழக்கொண்டு அவர் கழுத்தில் இட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர், காலையில் அடிகளைக் கண்டு கைப்பிடியாகக் கொண்டு அரசன் முன் நிறுத்தினர். வேந்தன் பெருஞ்சினம்கொண்டு அவரைக் கழுவேற்றுமாறு கட்டளையிட்டான். அடிகள் கழுமரத்தைக் கண்ணார நோக்கி, ' இதுவும் திருவருட்செயல் போலும் ' என நினைத்தனர்; நினைத்தலும் அக்கழுமரம் எரிந்து போயிற்று. அதுகண்ட காவலர் அஞ்சி யேர்டி வேந்தனுக்குணர்த்த அவன் ஒடிவங்து அடிகளைக்கண்டான்; அவன் பெயிர் பத்திரகிரியார் என்பது. அவரது துறவின் பெருமை அவற்குத் தெரிந்தது. அவன் உடனே தானும் துறவு பூண்டு அடிகட்கு மாணவனாப் அவர் பின்னே தொடரலானன். அடிகளும் அவனை மாணவனாய் ஏற்று அருளுரை வழங்கினர்.

பின்பு, பத்திரகிரி உடன்வர அடிகள் தென்னாடு அடைந்து திருவிடைமருதூரில் தங்கினர். அக்கோயிலில் கீழைவாயி லில் அடிகளும் மேலவாயிலில் பத்திரகிரியாரும் தங்கினார். ஒருநாள் அடியார் ஒருவர் அடிகளை வணங்கித் தமதுபசித்தீத் தணிய உணவிடுமாறு வேண்டினர். அப்போது மேலே வாயிலில் இருந்த பத்திரகிரியாரிடம் ஒடொன்றும் நாய் ஒன்றும் இருந்தன. அதனால், அடிகள், அந்த அடியாரை நோக்கி, மேலேவாயிலில் இருக்கும் குடும்பியிடம் சென்று கேள்' என்று கூறிவிடுத்தார். அவ்வாறே, அடியார் பத்திரகிரியாரைக் கண்டு அடிகள் கூறியதை எடுத்துரைத்து உணவுதருமாறு வேண்டினர். அது கேட்டுத் திடுக்கிட்ட பத்திரகிரியார், இவ்வோடும் நாயுமல்லவோ என்னை ஒரு குடும்பியாக்கின. ' என மனம் நொந்து ஒட்டை யெரிந்தாராக, அது நாயின்மேற்படவே, நாயும் இறந்து போயிற்று. சின்னாட்களில் பத்திரகிரியாரும் இறைவன் திருவடி நீழல் எய்தினார்.