பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

381



துமமுமாகியவற்றைக்காற்றாகவும்,நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசி வெகுளி முதலியவற்றைச் சுறாமீனாகவும், குடரைப் பாம்பாகவும், தசை எலும்பு முதலியவற்றைக் கடலிற் காணப்படும் திடர்களாகவும், உடம்பைக் கடலாகவும் துப்புரவுகளைச் சுழியாகவும், இறைவன் திருவருளை நாவாயாகவும் சிந்தையைக் கூம்பாகவும் ஆர்வத்தைப் பாயாகவும், நிறையைக் கயிறாகவும் ஒருமையுணர்வைக் கலத்தை இயக்கும் பொறியாகவும் காமத்தைப் பாராகவும் சுருங்கா உணர்ச்சியைத் துடுப்பாகவும் உருவகம் செய்வதும்![1] மேலே கூறிய கருத்தை வற்புறுத்துகின்றன. கழுமல நகரில் மாமரம் ஒன்று தளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து நிற்பது கண்டு கூறலுற்ற அடிகள், அதனை நவமணி கிடைத்த வணிகரொடு உவமித்து,

“வித்துரு மத்தினை பொத்தசெந் தளிரும்
ஒளிர்வயி டுரியக் குளிர்மது மலரும்
மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
மரகத மென்ன விரவுகாய்த் திரளும்
மறுவின் மாமணியெனும் நறியசெங் கனியும்
கிடைத்தசீர் வணிகரின் படைத்த மாந்தரு”

'2[2]

என்று உரைப்பது ஈண்டு நோக்கத் தக்கது.

இனி, தமது காலத்தில் செல்வம் மிக ஈட்டிச் சிறப்புடைய வாழ்க்கை நடத்திய செல்வர்களின் வாழ்க்கை இயல்பை அடிகள் நன்கு விளக்குகின்றார் கார் வருமென்று எதிர்நோக்கி நிலத்தையுழுது விதை வித்திப் பயிர் செய்வதும், ஈட்டிய பொருளை வாணிகம் செய்வதும், அருளின்றிப் பொரும் போர்வீரருடன் போர் செய்வதும், கடலிற் கலங்களை விடுத்து எந்திரம் கடாவிக் குன்று பார்த்துச் செலுத்துவதும், தாளாற்றலால் பொருள் செய்வதும், வாளாற்றலால் ஊண் பெறுவதும், வேந்தர் பொருட்டுப் போரில் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவதும், அறி


  1. 1. திருவொற்றி. 8.
  2. 2. திருக்கழு பல. 16.