பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

31

உள்ள, திருமயம் என்ற மூன்றிடங்களிலும் உள்ளன என்றும் கல்வெட்டாராய்ச்சியாளர்[1] கூறுகின்றனர். அவற்றுள், திருக்கழுக்குன்றத்துத் தமிழ்க் கல்வெட்டு,

‘திருக்கழுக்(கு)ன்(ற)த்துப் பொரு)மா
னடிகளு(க்)குக் கள(த்)தூர்(க்) கோட்டத்
(து)... திருக்கழுக்குன்ற த்
து ஸ்ரீமலைமேல்
(மூ)லத்தானத்து பெருமா
னடிகளுக்கு வழிபாட்டுப்(பு)றமா
க வாதாபிகொண்ட நரசிங்கப்
போத்த(ர)சர் வை(த்)தது”

என வருகிறது. தமிழ்க் கல்வெட்டின் தொன்மையாராய்ந்த அறிஞர், “நந்திவன்ம பல்லவமல்லன் காலமுதற்கொண்டு தான் கல்வெட்டுக்கள். பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவனவாயின; சிலவே வடமொழியில் உண்டாயின. கல் வெட்டுக்களில் தமிழை வழங்கும் முறையைத் தோற்றுவித்தவன் முதன் மகேந்திரவன்மன்; இவன் முன்னோர். பலரும் வட்மொழியில் எழுதினர்” என்று உரைக்கின்றனர்.

பல்லவர்களுடைய பழமையான தமிழ்க் கல்வெட்டில் வடவெழுத்துக்கள் இல்லாமல் இருப்பதை யாவரும் காணலாம். அக்காலத்தே தமிழில் வடசொற்களைப் பெய்து எழுதுவதாயின், வடசொற்களைத் தமிழெழுத்தால் எழுத வேண்டுமேயன்றி வடவெழுத்தையும் சேர்த்துப் பெய்து எழுதலாகாது என்பது தமிழ் வழக்கிலிருந்து வந்த கொள்கை. “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரிஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று தொல்காப்பியரும் வரையறை செய்துள்ளனர். அதனால், பழைய கல்வெட்டுக்களில் வடவெழுத்துக்காணப்படாதாயிற்று. பிற்காலக் கல்வெட்டுக்கள் அந்த வரையறையை உடைத்தெறிந்து விட்டன. வடவெழுத்துக்களும் கல்வெட்டுக்களில் விரவ-


  1. S, I; Ins, Vol. XII. No. 16.