பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:12

 தமிழகத்தில் நிலவிய புலவர்களுள் ஒளவையாரைப் போலக் கற்றவரும் மற்றவரும் ஒப்பப் போற்றும் பெருமை பெற்ற புலவர்கள் எவரும் இலர் என்று திட்டமாகக் கூறலாம். மக்கள் பேச்சிடையே அடிக்கடி ஒளவையார் அருளிய பொருளுரைகள் வந்து விழுந்தவண்ணம் இருக்கும். தமிழகத்தில் எப்பகுதிக்குச் சென்ருலும் அப்பகுதியில் வாழ்வோர் ஒளவையாருக்கும் தங்கள் பகுதிக்கும் ஒரு தொடர்பிருப்பதாக ஒருவரலாற்றினைக் கூறுவர் : அவர் பாடியதாக ஒரு பாட்டும் பாடுவர். இவ்வாறு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தன் புகழே நிலவப்பெற்ற சிறப்புத் தமிழ் முனிவன் எனப்படும் அகத்தியனுக்கும் அவன் பின்வந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலிய எவருக்கும் உண்டானதில்லை. புலவரது வரலாறு காணும் ஆராய்ச்சியாளர்க்கும் ஒளவையாரது வரலாறு போல மிக்க சிக்கலான வரலாறு வேறு கிடையாது. - சங்ககாலத்துத் தொகைநூல்களுள் ஒளவையார் பாடிய பாட்டுக்கள் உண்டு. இடைக்காலத்தில் தோன்றிய புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களது வரலாற்றோடு இயைத்துக் காட்டும் ஒளவையார் பாட்டுக்களும் உண்டு. அந்தாதி கோவை முதலிய நூல் பாடும் புலவர் நிரலில் பந்தனந்தாதி அசதிக்கோவை என்ற பிரபந்தம் பாடியவகையில்ஒளவையார்க்கும் உரிய இடமுண்டு. பள்ளியிற் பயிலும் இளஞ்சிறார்கள், முதன் முதலாக அறியும் புலவரும் ஒளவையாரேயாவர். இவ்வாறே சமயத்துறையில் பயில்வோரிடையிலும் ஒளவைக்குறள் என்றொரு நூல் காணப்படுகிறது. இதனால், இலக்கியம், சமயம், நீதி என்ற எல்லாத்துறையிலும் ஒளவையார் பெயர் நிலவுவதை நாம் காணலாம். - சங்ககாலத்துக்கும் கம்பர் ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் பெருமக்கள் வாழ்ந்த காலத்துக்கும் இடையே ஓராயிரம் ஆண்டுகட்குமேல் கழிந்திருப்பதால், இடைக்காலத்தில்