பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

சைவ இலக்கிய வரலாறு

இருந்தவராகிய ஔவையாரே, சங்ககாலத்தில் தகடூர் அதியமான்பால் நெல்லிக்கனி பெற்றுண்டு அவன் திருவோலக்கத்தைச் சிறப்பித்துக் கொண்டிருந்தவர் எனக் கூறுவது பொருந்தாது. இப்பொருந்தாமையை நன்கு உணர்ந்தே, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த முருகதாச சுவாமிகள் தாம்பாடிய புலவர் புராணத்தில் ஔவையாரை இருவராக்கி, “முன் ஔவை கலிவருட மூன்றாவதாயிரத்தாள், பின் ஔவை நாலாவதாயிரத்திற் பிறந்திட்டாள்”[1] என்று பாடி அருளினார். இவ்வாறு ஔவையாரை இருவராக்கும் இது புலவர் வரலாறு ஆராயும் ஆராய்ச்சியாளர் அனைவருக்கும் ஒத்த கருத்து. “பின் ஔவை” என்ற இரண்டாம் ஔவையாரே இங்கே ஆராயப்பெறுபவர்.

ஔவையார், தாம் பாடிய நல்வழி என்னும் நூலில் “தேவர் குறளும் திருநான் மறைமுடிவும், மூவர் தமிழும் முனி மொழியும்–கோவைத், திருவாசகமும் திருமூலர் சொல்லும்”[2] எடுத்தோதுவதால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னேயிருந்தவர் என்றற்கு இடமில்லை என்பது தெளிவாகிறது. கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டளவில் இருந்தவர் எனப்படும் உரையாசிரியராகிய இளம்பூரணர், “வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்தாகும்.”[3] என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர உரையில் “அட்டாலும் பால்சுவையிற் குன்றாது”[4] எனத் தொடங்கும் இவரது பாட்டை எடுத்துக் காட்டுகின்றார். இதனால், இரண்டாம் ஔவையார் கி. பி. பத்தாம் நூற்றாண்டினரெனக் கொள்வது நேரிதாதல் பற்றி இங்கே எடுத்து ஆராய்கின்றாம்.

வரலாறு

ஔவையார் சோழ நாட்டில் பாணர் குடியில் பிறந்தவர். பாணர்களில் பெண்களைப் பாடினி என்றும், பாட்டியர்


  1. புலவர் புராணம், ஔவையார். 126.
  2. நல்வழி. 40.
  3. தொல். செய்யு. 72.
  4. மூதுரை . 4.