பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஔவையார்

409

என்றும் பண்டையோர் கூறுவது மரபு.[1] அம் முறையில் ஔவையார், ஔவைப் பாட்டியென வழங்கப்பெற்றனர். பின்னர், “தந்தை தாயே பாட்டன் பாட்டி”[2] என்ற முறைமை தோன்றவே, ஔவைப்பாட்டியென்பது ஔவை மூதாட்டி யெனப் பொருள் படுவதாயிற்று; இன்றும் ஔவையாரை ஔவை மூதாட்டி என்பதே பெருவழக்காகவுளது.

பண்டை நாளில் பாணர்கள் கொடைக்கடன் பூண்ட வேந்தர்களையும் செல்வர்களையும் நாடிச்சென்று அவரது புகழைப் பாடி அவர் தரும் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அப் பாணர்களைப் பரிசில் தந்து ஆதரிக்கும் முகத்தால் நாட்டில் இசையும் கூத்தும் வளர்க்கப் பெற்றன. இவ்வாறே புலவர் பெருமக்களால் இயற்றமிழ்வளஞ்சிறந்தது. தமிழ்ச் செல்வர்கள் தங்களுடைய தமிழ் மூன்றையும்—புலவர்களால் இயலும், பாணரால் இசையும், கூத்தரால் நாடகமும்—வளர்ப்பது கடன் என்றும், எனவே இப்புலவர் முதலாயினார்க்குப் பரிசில் வடிவில் கொடை வழங்குவது கடன் என்றும் கருதினர். அதுபற்றியே அவரது தமிழ்க் கொடையைக் கொடைக்கடன் என்று சான்றோர் வற்புறுத்தினர். இடைக்காலத்தும் இம் மரபு குன்றாமல் இருந்தது என்பதை நந்திக் கலம்பகத்துப் பாணாற்றுப் படையும், “பெரும் புலவரும் அருங்கவிஞரும், நரம்புறு நல்லிசைப் பாணரும், கோடியரும் குயிலுவரும், நாடு நாடு சென்று இரவலராய் இடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ் படைப்ப”[3] என்று சோழவேந்தர் மெய்க்கீர்த்தியும் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அதனால் ஔவையார் பாடுதற்குரிய நற்பண்புடையாரைப் பாடும் தமிழ்ப்பணியையும் ஆற்றுவாராயினர். தமிழ் செல்வர் மனைகளில் வளரும் இளஞ்சிறார்களுக்குத் தமிழும் நல்லொழுக்கமும்


  1. “பாணர் வருக பாட்டியர் வருக” என்று மாங்குடி மருதனார் கூறுவது காண்க. (மதுரைக். 749.)
  2. பன்னிரு பாட்டியல். 179
  3. S. I. I. Vol, V. No, 645.