பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. முதற் கண்ட ராதித்தர்

வரலாறு

இடைக்காலத்தே விசயாலயன் வழிவந்த சோழ வேந்தருள் முதற்பராந்தகன் மகனராகிய கண்டராதித்தர் என்பவர் ஒருவர். இவர் இராசகேசரி வன்மரான கண்டராதித்த சோழர் என்றும் வழங்கப்பெறுவர். இவர்காலத்துச்சோழ நாடு சிதம்பரத்துக்கு வடக்கில் ஓடும் வட வெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்குத் தெற்கிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடையில் கிடந்தது.

இவ்வேந்தருக்கு வீரநாராயணி, செம்பியன் மாதேவியென மனைவியர் இருவர் இருந்தனர். இவர்க்கு நெடுநாள் காறும் மகப்பேறு இல்லாதிருந்தது ; பின்பு ஒரு மகன் பிறந்தான் ; அவனை உத்தம சோழன் என்பர் : மதுராந்தகன் என்றும் அவர்க்குப் பெயர் கூறுவதுண்டு. கண்டராதித்தருக்கும் மேற்கெழுந்தருளின தேவர் என்றும் சிவ ஞான கண்ட ராதித்தர் என்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளன.

கண்டராதித்தர் சிவபெருமான்பால் பேரன்புபூண்டவர்; திருஞான சம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்கள் பாடியருளிய திருப்பாட்டுக்களை இவர் நாடோறும் இடையருது ஓதும் இயல்பினர் ; தாமும் சிவபெருமான்மேல் பல இனிய பாக்களேப் பாடிப்பரவினர். இதனால் இவருடைய மனைவியாரான செம்பியன்மாதேவியென்பார் மிகச்சிறந்த சிவ பத்தியுடையரானர். அத் தேவியார் எண்ணிறந்த சிவப் பணிசெய்து "மாதேவடிகள்" என்று பிற்காலத்தே அரசர்கள் பரவும் சிறப்புப் பெற்றார்.

சைவத் திருமுறைகளே ஓதி ஓதிப் பயின்ற நாநலத்தால் கண்டராதித்தர் தில்லையம்பலக் கூத்தப் பெருமான் மேல் பஞ்சமப் பண்ணில் இனிய திருப்பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார்; அது சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் பிற்காலச் சான்றோர்களால் தொகுக்கப் பெற்-