பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

சைவ இலக்கிய வரலாறு

றுளது. கண்டராதித்தர் கி.பி. 957-ல் இறைவன் திருவடி நிழல் வாழ்வுபெற்றார் எனச்சோழர் வரலாறு1 கூறுகிறது.

பதிக வரலாறு

கண்டராதித்தர் சோழநாட்டை ஆட்சிசெய்து வருகையில் அவருடைய உள்ளம் திருமுறை யாசிரியர்களான திரு. ஞான சம்பந்தர் முதலியோருடைய வரலாறுகளை ஆராய்ந்து, திருஞானசம்பந்தர் தென்னாட்டிலுள்ள சிவன் கோயில்களையும், திருநாவுக்கரசர் வடநாட்டுக் கோயில்களையும், நம்பியாரூரர் மேற்கில் சேர நாட்டுச் சிவன் கோயில்களையும் பாடிப்பரவி இருப்பது உணர்ந்து, தான் வடமேற்கில் கங்கநாட்டுக்கு அப்பாலுள்ள ஆரிய நாட்டுச் சிவன் கோயில்களைக் கண்டு வழிபடவேண்டும் என்று வேட்கை கொண்டார். அவர் கொங்கு நாடு கடந்து கங்க நாட்டுக்குச் சென்றார் என்றும், படைகொண்டு போர் குறித்து அப்பகுதிக்குச் சென்றதில்லை என்றும் அவரது வரலாறு கூறுவது மேலே நாம் கொண்ட கருத்தை வலியுறுத்துகிறது. திருஞானசம்பந்தர் முதலியபெருமக்கருடைய திருப்பதிகங்களைச் சிவஞானம் என்றும், அவற்றை யோதுவதைச் சிவஞானம் ஓதுவது என்றும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் கூறுவதை முன்னர்க் கண்டு உள்ளோம். கண்டராதித்தர் கங்கநாட்டில் சிவஞானத்தை ஓதிவழிபட்டார் என்பதைப் பெங்களுர் வட்டத்திலுள்ள சென்னபட்டினத்துக் கல்வெட்டொன்று2 இவரைச் "சிவஞான கண்டராதித்தர்" என்று குறிக்கின்றது; அதே பகுதியிலுள்ள மழவூர் என்னும் ஊரிலுள்ள சிவன்கோயிலில், "கண்டராதித்த விடங்கர்" என்ற பெயரால் இறைவன் திருவுருவம் ஒன்று எழுந்தருளப் பெற்றிருக்கிறது.3 இவ்வாற்றால் கண்டராதித்தர் சிவஞானம் ஓதி வழிபடுங் கருத்தால் மேற்கு நாட்டிற்குச்சென்றிருக்கின்ருர் என்பது


1. பிற்காலச் சோழர் சரித்திரம். Vol. 1. பக். 64.

2. Ep. Car. Vol. IX. No. 92.

3. History of the Later Cholas by T. V. S. Pandarathar. p. 63.