பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாண்டார் நம்பி

439

காலமாதல் இனிது விளங்குகிறது. இதுபற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிபாகத் திரு. T. V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்1 கூறுவது வருமாறு :-

சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்து வந்த ஆதித்தன் என்ற சோழ மன்னன் ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் மூன்று பாடல்களில் பாராட்டியுள்ள செய்தியை அந்நூலை ஒரு முறை படிப்பொரும் உணர்ந்து கொள்ளலாம். அவற்றில் அச்சோழன் (ஆதித்தன்) கொங்கு நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்றும், ஈழநாட்டை வென்றவன் என்றும், புகழ்ச் சோழர் கோச் செங்கட் சோழர் ஆகிய அடியார்களைத் தன் முன்னோனாகக் கொண்டவன் என்றும் இவ்வாசிரியர் கூறியது உணரபாலதாகும். ஆகவே, இப் புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ்வேந்தன் (ஆதித் தன்) யாவன் என்பது ஆராயற் பாலதாம்.

சோழ மன்னருள் ஆதித்தன் என்னும் பெயருடையார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன், பரகேசரி விசயாலய சோழன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் என்பான். மற்றையோன் சுந்தர சோழன் மூத்த மகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய இரண்டாம் ஆதித்த சோழன் ஆவன்; அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர். அவன் தன் தந்தை யினாட்சியில் இளவரசனாக இருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப் போனன் என்பது தென்னார்க்காடு மாவட்டத்துச் சிதம்பரம் தாலூகாவில் உள்ள உடையார் குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது.2எனவே அவ்வரசிளங்கோ, தன் இளமைப் பருவத்திற்கொலேயுண்டிறந்தமை தெள்ளியது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிவ-


1. பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 76-8.

2. Epigraphica Indica, Vol. XXI. No. 27.