பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442

சைவ இலக்கிய வரலாறு

ஆகவே, நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக் காலமாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இக்கவிஞர் பெருமான் அந்நூலிலுள்ள 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடிநீழலெய்திய செய்தியையும் குறிப்பிடுதலால் இவனுக்குப் பிறகு கி. பி. 907-ல் பட்டம்பெற்ற இவன் புதல்வன் முதற் பராந்தகசோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரையில் இருந்திருத்தல் கூடும்.

நூலாராய்ச்சி

திருநாரையூர் விநாயகர் இரட்டைமணிமாலை, திருநாரையூரில் உள்ள விநாயகப் பிள்ளையார் பேரில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாக அந்தாதி முறையில் பாடப் பெற்றதொரு நூல். இதன்கண் இருபது பாட்டுக்கள் உள்ளன. தமிழிலக்கியங்களுள் தொண்ணூற்றாறுவகைச் "சிறு பிரந்தங்களில்" இரட்டை மணிமாலை யென்பது மிகவும் பழமை வாய்ந்தது. இதனை முதன் முதலாகப் பாடியவர் காரைக்கால் அம்மையாராவர்.

இனி, இத் திருவிரட்டைமணிமாலையில் விநாயகப் பெருமானுடைய திருவுருவம், செயல் நலம், அருள்வளம் முதலிய நலம் பலவும் இனிய சொற்களால் பாடப் பெறுகின்றன. சிவபெருமான் கையிலிருந்த மாங்கனியைப் பெறுதற்கு முருகன் அண்ட முழுதும் சுற்றி வந்ததும், விநாயகர் சிவபெருமானையே சூழ்வந்து பெற்றதுமாகிய வரலாற்றை இந்நூல் பன்முறையும் எடுத்தோதுகின்றது. தாம் பாடிய இவ்வெண்பா அந்தாதியை விநாயகர் ஏற்றுக்கொண்டு தம்மையும் அடிமை கொண்டதோடு அவ்வெண்பாவைச் சனாத்தனற்கு நல்கினர்1 என்றும், விரணக்குடியில் தோன்றிய நங்கை ஒருத்திக்குத் தமது பேரருளை விநாயகப் பெருமான் நல்கினர்2 என்றும் நம்பிகள் குறிக்கின்றார்.


1. திருநாரையூர் விநா.இரட். 13.

2. ஷெ - 14. ,