பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. வேம்பையர்கோன் நாராயணன்

வரலாறு

சைவப்புலவரான நாராயணனார்க்கு ஊர் வேம்பூர்: மாமல்லபுரம் மல்லை எனவும், தஞ்சாக்கூர் தஞ்சையெனவும் மருவினாற்போல வேம்பூர் வேம்பை என மருவிற்று. இது பாண்டிநாட்டு ஊர்களில் ஒன்று. இங்கே வாழ்ந்த வணிகர் பெருங்குடியில் தோன்றிப் பொருட்செல்வமும் தமிழ்ப் புலமைச்செல்வமும் ஒருங்கு பெற்று உயர்ந்தமையின் நாராயணனார் வேம்பையர்கோன் எனப்படுவாராயினர். அவருடைய தந்தை பெயர் மணியன் என்பது. இப்பெயர் பூண்டோர் பலர் இடைக்காலத்தே இருந்துள்ளனர். முதல் இராசராசன் காலத்தில் சேர நாட்டிலிருந்து மரகததேவர் படிமத்தைக்கொணர்ந்து திருப்பழனச் சிவன் கோயிலில் எழுந்தருள்வித்த விக்கிரமசிங்க மூவேந்த வேளான் இயற்பெயர் மணியன் என்பது வரலாற்றறிஞர் நன்கு அறிந்ததொன்று. “மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில்வேம்பையர் கோன், நற்பந்த மார்தமிழ் நாராயணன்”[1] எனப்படுதலால், இம் மணியனும் போர்ப்புகழ் பெற்றவன் என்பது தெரிகிறது.

நாடாளும் வேந்தர்க்கு அடுத்த நிலையில் வணிகரை வைத்துச் சிறப்பிப்பது தமிழ்மரபு. அரசர் வணிகர் வேளாளர் என நிறுத்தி, இம்மூவருள்ளும் துறவுபூண்டோர் அந்தணர் நிலையில் அடங்குவதுபற்றி, அந்தணர்களே இறுதியில் வைப்பர். பார்ப்பாருள் துறவு மேற்கொண்டோர் “வருணம்” “ஆசிரமம்” என்ற வரம்பிறந்து அந்தணருள் அடங்குதலால், ஏனேயோர் பார்ப்பனர் என வழங்கப்பட்டனர். பிற்காலத்தே இவ்வேறுபாடு மறைந்தமையின் இல்லுறையும் பார்ப்பனரும் அந்தணராகக் கருதப்பட்டனர் “அந்தணர் என்போர் அறவோர்” என்ற தமிழ் மறையைப் புறக்கணித்து, வேதநூலின் அந்தத்தை அணவு-


  1. சிராமலையந்தாதி. 103.