பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சைவ இலக்கிய வரலாறு

தந்தையார் அவர் அழுகை காணமாட்டாத பேரன்புடையவராதலால், அவர் விரும்பிய வண்ணமே தம்மோடு அழைத்துச் சென்றார். திருக்குளக்கரையில் ஞானசம் பந்தப் பிள்ளையாரை இருக்கவைத்து, அவர் மட்டில் நீர்க்குள் இறங்கி நீராடலானார். சிறிது போது கழிந்ததும் ஞானசம்பந்தர் தந்தையார் வரக்காணாமையால் அழத் தொடங்கினார்.

ஞானசம்பந்தப்பிள்ளையார் அழத் தொடங்கியது. கண்ட சிவபெருமான் உமையம்மையாகிய தம்முடைய தேவியாரை நோக்கி “நின்மார்பிற் பாலைப் பொன்வள்ளத்திற் கறந்து குளக்கரையில் அழுது நிற்கும் சிறு பிள்ளைக்கு ஊட்டுக” எனப் பணித்தருளினார். தேவியாரும் அவ்வண்ணமே செய்துவிட்டு வந்தார். சிறிது போதில் நீராடி முடித்துக்கொண்ட சிவபாத விருதயர் பிள்ளையாரிடம் வந்தார். அவர் திருவாயில் பால் வடிந்திருந்தது. அது கண்டதும், அவர் “உனக்கு இப்பால் தந்தவர் யார்?” என வினவினர். பிள்ளையார் வாளா இருக்க, தந்தையார் சினங்கொண்டு சிறுகோலொன்றைக் கையில் எடுத்து ஓங்கி, ‘எச்சில் மயங்கிட உனக்கு’ இதனை அளித்தார் யார்? அவரைக் “காட்டு” என்று அச்சுறுத்தினர். உடனே ஞானசம்பந்தர். தமது வலக்கையைக் கோயிற் புறமாக நீட்டிச் சுட்டு விரலாற் காட்டித் “தோடுடைட செவியன்” எனத் தொடங்கும் பாட்டைப் பாடலானார். இதைக் கேட்ட சிவபாத விருதயர் அச்சமும் வியப்பும் கொண்டவராய் மருண்டு நின்றார். திருஞானசம்பந்தர் திருப்பதியம் முற்றும் பாடி முடித்தார்.

இச்செய்தி ஊர் முழுதும் பரவிற்று. ஊராரும் பின்பு நாட்டவரும் கண்டு ஞானசம்பந்தப்பிள்ளையாரைச் சிவமெனவே கருதிப் பாராட்டி வழிபட்டனர். ஞானசம்பந்தரும் நாடோறும் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை இன்னிசைத் தமிழ் பாடி இறைஞ்சி ஏத்தி வருவாராயினர். ஒரு நாள் சீகாழிக்கு அண்மையிலுள்ள திருக்கோலக்கா என்னும் ஊர்க்குச் சென்று அங்குள்ள இறைவனைப் பாடினர். அப்போது ஆண்டவன் அருளால் அவர்க்-