பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

461

அவை பிற்காலத்தில் எழுப்பப்பட்டன என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள். ஆணும் பெண்ணுமாகத் தெய்வங்கள் தோன்றியதும் அவற்றிடையே மக்களைப்போல் காதலொழுக்கமும் அதற்கேற்பப் பாட்டுக்களும் தோன்றற்கு இடமுண்டாயிற்று. இத்தகைய கருத்துக்கள் மக்களிடையே ஊறஊற, முழுமுதற் பொருளாய் ஒன்றாய் உயிர் உலகுகளின் வேறாய் உடனாய் நின்று இலங்கும் பரம்பொருளாகிய சிவத்தைப் பாடுமிடத்தும் மக்கட்கமைந்த அகப்பொருட் கருத்துக்கள் இடம்பெறத் தலைப்பட்டன. பிற்காலத்தே கோவை நூல்கள் தோன்றியதும் இதனாலேயாகும். அந்தாதி முதலிய சின்னூல்கள் அவற்றைத் தொடர்ந்தும் சார்ந்தும் தோன்றினமையின் அவற்றுள் அகப்பொருட்பாட்டுக்கள் பெருக இடம்பெற்றன. “தொடரிடை யாத்த ஞமலியைப் போல் இருந்தேன் இச் சுற்றத் திடரிடையாப்பவிழ்த்து என்னைப் பணிகொள்”[1] என்ற கருத்துடன் எழுந்த இச்சிராமலையந்தாதி, அகப்பொருள் துறைகளைத் தொடுத்துப் பாடும் சூழ்நிலையில் தோன்றியதாகலின், படிப்போர் உள்ளத்தைச் சிற்றின்பச் சேற்றில் அழுத்தும் கருத்துக் கொண்ட பாட்டுக்களை விலக்க முடியாதன்றோ?

இளங்காளை யொருவன் இளநலம் கனிந்திலங்கும் நங்கையொருத்தியைக் காண்கிறான்; அவள் பந்தாடிக்கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தில் அவளுடைய அழகிய இடை மின்னற்கொடி போல் வளைந்து நெகிழ்ந்து துவண்டு அசைந்த நலம் அவன் உள்ளத்தைக் கவ்விற்று; அவன் கருத்தழிந்து காதல் வெள்ளத்தில் மூழ்கி, அவள்பால் தன் நெஞ்சினைத் தூது விடுக்கின்றான். அப்போது அவன்,

“வந்துஇறைஞ்சித் தளர்ந்து என்சொல்லுமோ
        சிந்தை; மாதவர்மேல்
சந்து இறைஞ்சிப் படர்சாரல் சிராமலைத்
        தாழ்பொழில்வாய்க்


  1. 1. சிராமலை யந். 94.