பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

முதலிய விஷயங்களைப்பற்றியும் தக்க அறிஞர்களைக்கொண்டு ஆராய்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதி வெளியிடுதல் தமிழ் வளர்ச்சிக்குரிய சிறந்த பணிகளில் ஒன்றாகும்.

இப்பணியின் தேவையை நன்குணர்ந்தவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களாவார்கள். அவர்கள் கொண்ட நோக்கத்தைப் பின்பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆராய்ச்சித்துறையில் பணி ஆற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து வெளியிடுவதெனத் திட்டம் வகுத்தனர். அத்திட்டத்தின்படி இதுவரை நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இப்பொழுது அவ்வரிசையில் அமைந்த “சைவ இலக்கிய வரலாறு” என்ற புத்தகம் வெளி வருகின்றது.

இதனைச் சிறந்த முறையில் ஆராய்ந்து எழுதியுதவிய அறிஞர், இப்பொழுது மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்து தமிழ்ப்பணி புரிந்து வரும் அன்பர் சித்தாந்த கலாநிதி வித்துவான் ஔவை S. துரைசாமி பிள்ளையவர்கள் ஆவர். இவர்கள் 1942 முதல் 1951 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக இருந்து நல்ல முறையில் தமிழ்ப்பணி புரிந்துள்ளார்கள். அக்காலத்தில் எழுதப் பெற்றதே “சைவ இலக்கிய வரலாறு” என்ற இந்நூலாகும். இந்நூலில் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு முடியவமைந்த காலப் பகுதியில் தோன்றிய சிறந்த செந்தமிழ் நூல்களாகிய சைவ இலக்கியங்களைப் பற்றிய செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பிற நாட்டார் யாத்திரைக் குறிப்புகள் முதலிய வரலாற்றுச் சான்றுகள் கொண்டு தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன.

இந்நூலாசிரியராகிய திரு. பிள்ளையவர்கள் இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணி புரிந்த காலத்தில் சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய ‘ஞானாமிர்தம்’ என்ற நூலை ஏட்டுச்சுவடியுடன் ஒத்து நோக்கித் தாம் ஆராய்ந்து கண்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் திருந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறே சிவஞானபோதச் சிற்றுரையும் தெளிவான பொருள் விளக்கங்களுடன் இவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. சங்கத்தொகை நூல்களாகிய பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, புறநானூறு என்பவற்றுக்கு இவர்கள் எழுதிய