பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சைவ இலக்கிய வரலாறு

தான் விடந் தீண்டி யிறந்த வணிகன் ஒருவனை உயிர்ப்பித்து அவனுக்குத் திருமணம் செய்வித்ததுமாகும். செங்காட்டங்குடியில் கணபதீச்சுரத்துக்குச் சென்று ஞானசம்பந்தர் வணங்கும்போது, அவர்க்குத் திருமருகல் காட்சி இறைவனால் அருளப்பட்டது. இவ்வாறு சின்னாள் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் விருந்தினராக இருந்து திருப்புகலூர்க்குச் சென்றார்.

திருப்புகலூரில் முருக நாயனார் என்னும் சான்றோர், ஞானசம்பந்தரை வரவேற்றுத் தமது திருமடத்திலே இருக்குமாறு வேண்டினார். பிள்ளையார், அங்கேயிருந்து புகலூர்ப் பெருமானைப் பணிந்து பாடி வழிபட்டிருக்கும் நாளில், திருநாவுக்கரசர் அங்கே வந்து சேர்ந்தார். இருவரும் அளவளாவி இறைவனைப்பாடிப் பரவினர், அப்போது திருநாவுக்கரசர், ஞானசம்பந்தருக்குத் திருவாரூர்த் திருவாதிரை விழாச் சிறப்பை யெடுத்துக் கூறினர். அது கேட்ட ஞானசம்பந்தப்பிள்ளையார் தாமும் திருவாரூர்க்குச் சென்று வழிபட்டுவிட்டு மீண்டும் திருப்புகலூருக்கே வந்து சேர்ந்தார்.

புகலூரில் சில நாட்கள் கழிந்தன. பின்பு இருவரும் சேர்ந்து, திருவம்பர் திருக்கடவூர் முதலிய பல திருப்பதிகளை வழிபட்டுக்கொண்டு திருவீழிமிழலைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே இருவரும் தனித்தனியே தங்குதற்கு இருவேறு மடங்கள் இருந்தன. அவற்றை இடமாகக் கொண்டு இருவரும் அண்மையிலுள்ள திருப்பேணு பெருந்துறை முதலிய பதிகளை வணங்கி வழிபட்டனர். மேலும் இருவரும் திருவீழிமிழலையில் இருக்கும்போது, நாட்டில் மழையின்மையால் வறுமைமிகுந்து மக்கட்கு வருத்தத்தை விளைவிப்பதாயிற்று. ஞானசம்பந்தருக்கும் நாவரசருக்கும் ஆண்டவன் நாடோறும் படிக்காசு நல்கி, அவர்கள் திருப்பணி முட்டுப்படாதவாறு திருவருள் செய்தான். விரைவில் மழைவளம் உண்டாயிற்று; விளைவு பெருகிற்று; மக்கட்கு நல்வாழ்வு எய்தியது. இருவரும் திருவீழிமிழலையின் நீங்கித் திருமறைக்காடு நோக்கிச் செல்வாராயினர்.

திருமறைக்காட்டில், ஞானசம்பந்தரும் நாவரசரும்