பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சைவ இலக்கிய வரலாறு

ஈழநாட்டுத் திரிகோணமலையையும் திருக்கேதீச்சுரத்தையும் பாடிப் பரவினார். அங்கிருந்து பல பதிகளை வழி பட்டுக்கொண்டே குலச்சிறையார் பிறந்த பதியான மணமேற்குடி யடைந்து சிலநாள் தங்கியிருந்தார். முடிவில் மதுரையை யடைந்து வேந்தன்பால் பிரியாவிடைபெற்றுக்கொண்டு சோழநாடு அடைந்த ஞானசம்பந்தர், முள்ளிவாய்க்கரையை யடைந்தார். அங்கே ஆறுபெருக்கெடுத்துச் செல்லவே, எதிரே தோன்றிய திருக்கொள்ளம்பூதூருக்கு, அங்குக் கட்டப்பெற்றிருந்த ஓடமொன்றை அவிழ்த்து அதில் அடியாருடனே ஏறி ஆற்றைக்கடந்து சென்றார். அங்கே இறைவனைப் பதிகம் பாடிச் சிலநாள் தங்கினார்.

காரைக்கால் அருகிலுள்ள திருத்தெளிச்சேரிக்குச் சென்று ஆண்டவனைப் பாடிப் பரவிவந்த பிள்ளையார் போதிமங்கை யென்ற வூரை நெருங்கினர். அங்கே புத்தர்கள் வாழ்ந்தனர். சமணர்களை வென்று வாகை சூடி வரும் ஞானசம்பந்தர் வரவு அப்புத்தர்கட்குப் பெருஞ் சினத்தை உண்டுபண்ணிற்று. அவர்கட்குத் தலைவனான புத்தநந்தி பிள்ளையாரை வாதத்துக்கழைத்தான். அவரும் அதற்கு உடன்பட்டிருக்கையில் புத்தநந்தியின் தலையில் இடி விழவே அவன் இறந்துபோனான். பின்பு சாரிபுத்தன் என்பான் வந்து வாதிட்டுத் தோல்வியுற்றான். இருந்த புத்தர்கள் பலரும் சைவராய்த் திருநீறணிந்து கொண்டனர்.

ஞானசம்பந்தர், பின்பு, திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் இருப்பது கேள்வியுற்று அவ்வூர்க்குச் சென்றார். அவர் வருகையறிந்த நாவரசர், எதிர்கொள்ளவந்த கூட்டத்தோடு தாமும் ஒருவராய்ச்சென்று, சிவிகை தாங்குவாரோடு தாமும் ஒருவராய்க்கூடிக்கொண்டு திருப்பூந்துருத்திக்குள் வந்தார். ஞானசம்பந்தர் “அப்பர் எங்குள்ளார்?” என வினவ, சிவிகைக்கீழ் இருந்த நாவரசர் “இங்குள்ளேன்” என விடையிறுக்க, பிள்ளையார் சிவிகையினின்று கீழே இறங்கி நாவரசின் நற்றாளை வணங்கி அன்பு மிகுந்து அவருடன் திருப்பூந்துருத்திக் கோயிற்குச் சென்று, ஆண்ட-