பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

விளக்கவுரைகள் புலவர்களும் பொதுமக்களும் மகிழ்ந்து பாராட்டும் முறையில் அமைந்திருக்கின்றன. இவை இவர்களது தெளிந்த புலமைத்திறத்தினையும் இடைவிடாத உழைப்பினையும் நன்கு விளக்குவனவாகும்.

சைவ இலக்கியங்களைப் பற்றிய வரலாற்றினை விளக்கக் கருதிய திரு. பிள்ளையவர்கள் சைவ நூல்கள் தோன்றி வளர்த்த கால நிலையையும் சூழ்நிலையையும் மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் முறையில் சைவ இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயாகத் தமிழ்நாட்டு வரலாற்றினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டியிருப்பது மிகவும் பொருத்தமுடையதாகும். சங்க நூல்களிலும் பன்னிரு திருமுறைகளாகிய அருள் நூல்களிலும் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த சாத்திரங்களிலும் ஆழ்ந்த பயிற்சியும் ஆராய்ச்சியும் நிரம்பப்பெற்ற அன்பர் திரு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தமது புலமைநலம் அனைத்தும் தமிழ்நாட்டிற்குப் பயன்படும் முறையில் இவ்விலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதியுள்ளார்கள். இது மிகவும் பாராட்டிப் போற்றுதற்குரியதாகும்.

புலமை நலமும் ஆராய்ச்சித் திறமும் வாய்ந்த தம்முடைய உரைநடை நூல்களாலும் சுவை மிகுந்த சொற்பொழிவுகளாலும் தமிழ்ப்பணியும் சமயப்பணியும் புரிந்துவரும் இந்நூலாசிரியர் சித்தாந்த கலாநிதி வித்துவான் திரு. ஔவை துரைசாமி பிள்ளை அவர்களுக்குப் பல்கலைக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்தும் உரியனவாகும்.

அண்ணாமலை நகர்
தி. மூ. நாராயணசாமி பிள்ளை
24-3-1958