பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகையில், தமிழ் இலக்கிய வாலாறு எழுதவேண்டிய ஏற்பாடொன்று உருவாயிற்று. தமிழிலக்கியங்களைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு இவ்வரலாற்றைக் காண்பது முறையாகத் தோன்றினமையின் அம்முறையில் சைவ இலக்கியப் பகுதி என்பால் எய்திற்று.

இலக்கியங்கள் பலவும் தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கு அறிந்த செய்தி. அந்நெறியில் சைவ இலக்கியங்கள் தாம் பிறந்த காலத்து வாழ்ந்த சைவ மக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப் பயில்வோர்க்கு உணர்த்தும் அறிவுக் கருவூலங்களாகும். ஆயினும் இவ்விலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும்; அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிகம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொதுவரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. நம் தமிழ் நாட்டின் தவக்குறைவாலும், தமிழ் மக்களின் ஊக்கமின்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவே இல்லை. தமிழகத்தின் பொது வரலாறு, தொல்காப்பியர் காலம், தமிழ் மூவேந்தர் காலம், பல்லவர் காலம், இடைக்காலச் சோழ பாண்டியர் காலம், விசய நகர வேந்தர் காலம், முகமதியர் காலம், மேனாட்டவர் காலம் எனப் பல பாகுபாட்டில் அறியக் கிடக்கின்ற தெனினும், அத்துறையில் உறைத்து நின்று விரிவாக ஆராய்ந்து எழுதும் ஆர்வம் அறிஞர்களின் உள்ளத்தில் இன்றுகாறும் தோன்றிச் செயற்படவில்லை. காலஞ்சென்ற சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் முதலியோர் பாரத நாட்டின் பொது வரலாறே தென் தமிழ் நாட்டிலிருந்து தான் தொடங்கவேண்டும் எனக் கூறி வந்தனர். நாட்டு மக்களிடையிலும் பல்வேறு புராண இதிகாசக் கதைகள் பரவியிருக்கும் அளவு இல்லையாயினும் அதிற் பாதியளவு தானும் நம் நாட்டைப் பல்வேறு காலங்களில் இருந்து ஆண்டு வந்த மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலன்களையும் பற்றிய அறிவு அறவே காணப்படுகிறதில்லை. நாட்டின் பொது வரலாற்றை அடிப்படையாகவும் பின்னணியாகவும் கொண்டு எழுதற்குரிய இலக்கிய வாலாறு, மேலே காட்டிய குறைபாட்-