பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சைவ இலக்கிய வரலாறு

திருச்சிறுகுடி, திருச்சிற்றேமம், திருச்சோபுரம், திருத்தென்குடித்திட்டை, திருநெல்வாயில் என்ற திருக்கோயில்கட்குத் திருஞானசம்பந்தர் சென்றதாகச் சேக்கிழார் கூறிற்றிலர்.

திருப்பதிக ஆராய்ச்சி-வரலாற்றுக் குறிப்பு

இனி, திருஞானசம்பந்தர் பாடியுள்ள திருப்பதிகங்களைக் காண்பது முறையாகும். இத்திருப்பதிகங்களின் இறுதியிலுள்ள திருப்பாட்டில் அப்பதிகத்தைப் பாடிய தமது ஊரும் பெயரும் தவறாமல் குறித்துள்ளார் திருஞானசம்பந்தர், அதன்கண், அப்பதிகத்தை ஓதுபவர் எய்தும் பயனையும் அவர் குறிப்பதனால் அதனைப் பயனுதலிய திருப்பாட்டென்பதும் உண்டு. அது திருப்பதிகத்தை முடித்து நிற்பது பற்றித் திருக்கடைக்காப்பு என்று பெரிதும் பலராலும் கூறப்படும்.

இத்திருக்கடைக்காப்பில் திருஞானசம்பந்தர் தம்மைச் சீகாழிப்பதிக்கு உரியவரென்றும், தாம் மறையவர் மரபில் கவுணியர் குடியிற் பிறந்தவரென்றும் குறிக்கின்றார். இவர் காலத்தே சீகாழியில் வாழ்ந்த வேதியர்கட்கு இக்கவுணியர்குடி தலைமை பெற்றுச் சிறந்து விளங்கிற்று என்று இவர் திருப்பதிகத் திருக்கடைக்காப்புச் செய்யுட்களால்[1] அறிகின்றோம்; “புகலிந்நகர்பேணும், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்”[2] என்றும், “நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன்”[3] என்றும் “கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம்பந்தன்”[4] என்றும், “கவுணியர் குலபதி காழியர் கோன்”[5] என்றும் வருவன காண்க.


  1. சோழநாட்டு வேதியர் மரபுக்கே ஞானசம்பந்தர் பிறக்த குடி தலைமை பெற்று நிலவிற்றென்பதை, “பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன்” (50) என அவர் கூறுவது கொண்டே அறியலாம்.
  2. ஞானசம். 107.
  3. ஞானசம். 280.
  4. ஞானசம். 381.
  5. ஞானசம். 112.