பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

67

ஞானசம்பந்தர் உமையம்மையளித்த ஞானப்பால் உண்டு சிவஞானம் கைவரப் பெற்றவரென்பது வரலாறு. பொற்கிண்ணத்தில் ஞானப்பாலைப் பெய்து தம்மை உண்பித்து இறைவன் ஆட்கொண்ட நிகழ்ச்சியை, அவரே, “போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்”[1] என்று குறித்திருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. இதனுள் திருஞானசம்பந்தர் சிவஞான சம்பந்தரென்பது ஒருதலை. “கொய்ம்மா மலர்ச்சோலைக் கொச்சைக்கு இறைவன் சிவஞானசம்பந்தன்”[2] என்று இக்குறிப்பையும் அவர் காட்டியருளுவது காணத்தக்கது. இத்தகைய சிவஞானப்பேறு பிறரெவரும் பெறற்கு அரிதென்பது உலகம் அறிந்த செய்தி. இவ்வண்ணம் பெறலரும் பேறாகிய சிவ ஞானப்பேற்றால் பெருமைமிக்க ஞானசம்பந்தர், அக்காலத்து நிலவிய கலைஞானம் பலவும் நிரம்பப்பெற்றிருந்தனர். கற்றுவல்ல பெரியோர் பலருடைய கேள்வியும் சூழ்நிலையும் அவர்க்குக் கிடைத்திருக்கின்றன. ஞானசம்பந்தர் “தன்னொளி மிக்குயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்”[3] என்பன போன்ற தொடர்களால் தம்மைத் தமிழ்க்கே உரியரெனக் கூறுகின்றாராயினும், வடமொழி நான்மறையிலும் தாம் மிக்க வன்மை யுடையரென்றும், அம்மறையினும் தமக்கு நீங்காக் கிழமை யுண்டென்றும் நாம் அறிய, “நார்மலிங்தோங்கும் நான்மறைஞானசம்பந்தன்”[4] எனவும், “அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் ஞானசம்பந்தன்”[5] எனவும் பல திருப்பதிகங்களிற் குறித்துரைக்கின்றார்.

இறைவன் திருவருளாற் பெற்ற சிவஞானத்தால், செயற்கையாற் பெறப்படும் தமிழ் வடமொழிகளின் கலைஞானமும் ஒருங்கு கைவரப்பெற்ற திருஞானசம்பந்தர், தம்முடைய ஞானத்தின் சிறப்பை, “ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்”[6] “பிரமாபுரத்து மறைஞான


  1. ஞானசம், 282.
  2. ஞானசம். 175
  3. ஞானசம். 41
  4. ஞானசம். 41
  5. ஞானசம். 47
  6. ஞானசம். 195.