பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

69

பொருளாராய்ச்சி

இங்ஙனம் இனிய தமிழால் திருப்பதிகங்கள் பாடலுற்ற திருஞானசம்பந்தர், அத்திருப்பதிகங்களைப் பொதுவாகச் “செந்தமிழ்”[1] “ஒண்டமிழ்” [2] “விலையுடைய அருந் தமிழ்”[3] “இன்தமிழ்”[4] “பூந்தமிழ்”[5] என்று கூறுவாராயினும், அவற்றின் சிறப்பும் விளங்க, “திருநெறியதமிழ்”[6] “அருள்மாலைத் தமிழ்”[7] “மறையிலங்கு தமிழ்”[8] “தவம் மல்குதமிழ்”[9] “மறைவளரும்தமிழ்”[10] “பொய்யிலிமாலை”[11] “அளிதருபாடல்”[12] என எடுத்தோதுகின்றார். சில திருப்பதிகங்கட்குத் தாமே பெயர் கொடுத்து “பல்பெயர்ப் பத்து”[13] “இன்னிசை” [14] “ஏழிசைமாலை”[15] “பூம்பாவைப் பாட்டு”[16] “பாசுரம்”[17] என்று இயம்புகின்றார். இப்பதிகங்களை ஓதும் முறையையும் ஓதியவழி எய்தக்கூடிய பயன்களையும் பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யுளில் தவறாமல் கூறியுள்ளார். “காழிநாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய்நவிற்றிய தமிழ்மாலை, ஆதரித்திசை கற்றுவல்லார்சொலக் கேட்டு உகந்தவர்தம்மை வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந்து அடையாவே”[18] எனவும் கூறுகின்றார்,

இனி, அந்தணர் முதலிய நால்வகை மரபினருக்கும் தனித்தனி மாலை கூறுவது தமிழ் நூல்களின் இயல்பு. அவ்வகையில் அந்தணருக்குத் தாமரைப்பூவை மாலையாகக் கூறுவர். திருஞானசம்பந்தர் அந்தணராதற்கேற்பத் தாம் தாமரைப்பூ மாலை அணிவது இயல்பென்பதை, “கமலத் தார்மிகுந்த வரைமார்பன் சம்பந்தன்”[19] என்று குறித்துள்ளார்.


  1. ஞானசம். 293.
  2. ஞானசம். 291.
  3. ஞானசம். 263.
  4. ஞானசம். 114.
  5. ஞானசம். 194.
  6. ஞானசம். 1.
  7. ஞானசம். 3.
  8. ஞானசம். 61.
  9. ஞானசம். 112
  10. ஞானசம். 203.
  11. ஞானசம். 362.
  12. ஞானசம். 380.
  13. ஞானசம். 63.
  14. ஞானசம். 108.
  15. ஞானசம். 173.
  16. ஞானசம். 183.
  17. ஞானசம். 312.
  18. ஞானசம். 242
  19. ஞானசம். 60.