பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

திருஞானசம்பந்தர்

 என்பதே பெயரென்பதை, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கிய மணிமேகலை நூலாசிரியர் குறிப்பால்1 இனிது விளங்குகிறது. அந்நெறியினரான தமிழர் அனைவரும் சைவரேயாவர். வேதவழக்கினை மேற்கொண்டொழுகிய வேதியரும் சிவனை வழிபடுதலால் சைவர் எனப்படுவர். அங்ஙனமிருக்க, திருஞான சம்பந்தர், "காதலாற் சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகர் 2” என்று குறித்து, அகச் சமயத்தவர் அறுவருள் ஒருதிறத்தினரான பாசுபதரோடு அவர்களைச் சேரவைத்துக் கூறுகின்றார். இதனால், சைவர் 'என்ற சொல்லால் ஒரு சிலரைச் சுட்டிக் காட்டுகின்றார் ஞானசம்பந்தர் என்பது தெற்றெனத் தெரிகிறது. அவர் கள் யாவர் ? முதன் மகேந்திரவன்மன் எழுதிய மத்த விலாச நாடகத்தாலும் திருநாவுக்கரசர் வழங்கியுள்ள திருப்பதிகங்களாலும் ஞானசம்பந்தர் காலத்தே காபாலி களும் மாவிரதிகளும் இப்பாசுபதரோடு உடன் இருந்திருக்கின்றனர் என முன்பே கூறினோம். சிவபெருமானுக்குச் சைவன் என்பதும் ஒரு பெயர். "சீருறு தொண்டர் கொண்டடிபோற்றச் செழுமலர் புனலொடு தூபம், தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார்"3 என்பது காண்க. சைவக் கோலம் பூண்டு தலையோட்டில் பலியேற்றுண்டு கோயில்களை இடமாகக்கொண்டு ஒழுகுவர் காபாலிகள். மத்தவிலாசத்திற் காணப்படும் காபாலி திருவேகம்பத் திருக்கோயிலை இடமாகக்கொண்டுள்ளான். மாவிரதிகளும் தீக்கை பெற்று எலும்புமாலையணிதல் முதலிய சரியைகளை " மேற்கொண்டவரெனச் சிவஞானபாடியம் கூறுகிறது. இவ்விருத்திறத்தார்பாலும் சைவக்கோலம் சிறந்து தோன்றுவது கொண்டு இவ்விரு திறத்தோரும் ஞானசம்பந்தரால் சைவர் எனக் குறிக்கப்பட்டனர் எனக் கோடல் நேரிது. ஏனைக் காளாமுகம், வாமம், பைரவம். ஐக்கியவாதம் முதலிய சைவக் கிளைகள் ஞானசம்பந்தர் காலத்துக்குப் பின்பே தமிழகத்திற் புகுந்தனவாதல்

1. மணிமே. 27 : 89-95. 1 . ஞானசம். 66:4. 3. ஞானசம். 376 : 3.