பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சைவ சமய சாரம்

முதலியன பாராட்டாது, எவ்வுயிரிடத்தும் அன்பு செலுத்தல் வேண்டும். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோரே சைவர் எனப்படுவர்.

சைவர் இன்னார் என்பதைப் புலப்படுத்தும் பொருட்டு அவர்க்கு விபூதி ருத்திராட்சதாரணம் ஏற்படுத்தப்பட்டது. விபூதி தூய்மையைக் காட்டுவது. பூசுநீறுபோல் 'பூசுநீறுபோல் உள்ளும் புனிதர்கள்' என்றார் சேக்கிழாரும். உருத்திராட்சம், சிவபெருமான் திருவருட் கண்களினின்றும் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 'கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்' என்பது திரிகடுகம். ஆகவே, உருத்திராட்சம் இரக்கத்துக்கு அறிகுறி என்றுணர்க.

எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாத கூட்டத்தார் இன்னார் என்பதை விளக்கும் புறச்சின்னங்கள் நீறுங் கண்டிகையுமாம். இதுகாலை,சில குடியருங் கொலைஞரும் விபூதி ருத்திராட்சந் தரித்து, அச்சின்னங்களின் மாண்பைக் கெடுத்து வருகிறார். மடங்களிலும் சிவசின்னங்களின் மாண்பு இறந்துபட்டது.ஊரை வஞ்சிப்பதன்பொருட்டே சில சகோதரர் சிவ வேடம் பூண்கிறார். என் செய்வது! ஈண்டுக் கருதற்பாலது ஒன்றே. அஃது, அன்பு நெறிக்கு அடையாளமாகவே விபூதி ருத்திராட்சதாரணம் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட தென்பது.