பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிபாடு

13

உயிர்கள் வழிபாடு என்பதில் மக்கள் முதலிய எல்லா உயிர்கள் வழிபாடும் அடங்கும். சைவ சமயிகள் எந்த உயிர்கட்குந் தீங்குசெய்தலாகாது. சிலர் விபூதி ருத்திராட்சந் தரித்து முறையாகச் சிவாலய வழிபாடு செய்கிறார்; அடியார் பூசை செய்கிறார்; கொடிகட்டி அன்னதானஞ் செய்கிறார். இந்நல்வினைகள் செய்யும் மனிதர், ஆடு கோழி முதலிய உயிர்களைக் கொன்று, அவைகளின் புலாலை உண்பாராயின், அன்னவர் சைவராகார்; சிவனடியாரானார். ஆடு கோழி முதலிய உயிர்கள் தாங்கியுள்ள உடலங்களும் சிவாலயங்களேயாகும். அச்சிவாலயங்களுக்கு ஊறு செய்பவர்களைச் சைவர் - சிவனடியார் - என்று எவ்வாறழைப்பது?

'படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோயில்' என்பது தமிழ்நாட்டுப் பழமொழிகளில் ஒன்று. திருவாசகம் முதலிய சைவ நூல்களை ஓதி, உயிர்களின் உடலங்களை அழிக்கும் மாக்களைக் கண்டே இப்பழமொழி எழுந்தது போலும்! சைவம் ஜீவகாருண்ணிய சமயம். ஆதலால் கொல்லா விரதங் கொண்டவரே சைவர். மற்றவர் எவரோ!

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற்
கண்விழித்து வயங்கு மப்பெண்
உருவாணை யுருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற வருவ னேனுங்