பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சைவ சமய சாரம்

கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்த னேலெங்
குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை
ஞானியெனக் கூறொ ணாதே
–இராமலிங்க சுவாமிகள்

விண்ணப்பம்

எல்லாச் சமயங்கட்குந் தாயகமாயுள்ள சைவ சமயத்தைக் கடைப்பிடித் தொழுகுவோர், தாம் மாத்திரஞ் சமய நூல்களை ஓதி உணர்ந்து, சிவாலயங்களையும் உயிர்களையும் வழிபட்டு, கொல்லாமை முதலிய நோன்புகளைக்கடைப்பிடிக்கும் அளவோடு நிற்றலாகாது. அவர், மற்றவரையும் தம் வழியில் நிறுத்த முயலல்வேண்டும். பிறருடைய அறியாமையைக் கண்டு, இரக்கமுற்று, அவர்தம் அறியாமையை ஒழிக்க முயல்வதும் ஜீவகாருண்ணியத் தின் பாற்பட்டதாகும். சமயாசாரியர் முதலிய பெரியோர் தேவார திருவாசக முதலிய நூல்களை ஏன் அருளிச் செய்தனர்? மெய்கண்டார் முதலியோர் ஞான நூல்களை எவர் பொருட்டுத் திருவாய்மலர்ந்தருளினார்? பின் வருவோர் உய்ய வேண்டுமென்னுங் கருணையாலன்றோ அவர் தொண்டாற்றினார்? 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றன்றே திருமூலர் ஓதியிருக்கிறார்? இவ்வளவு பரந்த கொள்கையைத் தாங்கியுள்ள சைவ சமய நூல்களை, எல்லாரும் ஓதியுணரச் சைவ சமயிகள் உழைத்தல்வேண்டும்.