பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணப்பம்

15

சைவ மடங்களில் ஒரு வகுப்பார்க்கே ஞான் நூல்கள் போதிக்கப்பட்டு வருவதைச் சைவ சமயிகள் கவனித்து மடங்களைத் திருத்த முயலல் வேண்டும். தாகமுடையார்க்குத் தண்ணீர் உதவ வேண்டுவது அன்பர் கடமை. அதுபோல ஞான தாகமுடையோர் எவராயினும் அவர்க்கு ஞான நூலைப் போதிக்கவேண்டுவது சைவக் குரவன்மார் கடமை, ஞானவேட்கைகொண்டு ஓடி வருவோர்க்கு ஞான நூலைப் போதிக்க மறுப்பது அறமாகாது. இவர்க்கும் கொலைஞர்க்கும் வேற்றுமையுண்டோ?

சமரசத்தையும், அன்பையும், ஜீவகாருண்ணியத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள சைவ சமயக் கொள்கையைப் பரப்ப முயலவேண்டுவது ஒவ்வோர் உண்மைச் சைவர்தங் கடமை என்பதை அறிவுறுத்த வேண்டுவதில்லை. பௌராணிக சைவம் ஒன்று இடையில் தோன்றி ஞான சமயத்தை இடர்ப்படுத்துகிறது. சைவம் எல்லாச் சமயங்களுக்குந் தாயகமா யிருப்பதைக் கருதியே தாயுமானார் 'சேரவாருஞ் செசுத்தீரே' என்று கூவி உலகத்தையே அழைக்கிறார். அவர் திருவடி போற்றுஞ் சைவ உலகம் அவரைப்போல உலகத்தை நோக்கி ஏன் அழைத்தலாகாது? உலகம், சைவ சமய உண்மையைக் கண்டு, அதைக் கடைப் பிடிக்குமாறு, சைவ சமயிகள், சைவ ராஜாங்கத்தை ஒழுங்கு படுத்துவார்களாக.

சைவ சமயிகளே ! அன்பர்களே! உங்கள் சமயம் காலங்கடந்தது; சமாசத்தைப் போதிப்பது;