பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சைவ சமய சாரம்

பழமையிற் சிறந்த இருக்கு வேதத்திலும், தமிழ்நாட்டுப் பழைய நூல்களிலுஞ் சிவமென்னுஞ் செம்பொருள் காணப்படுகிறது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும், பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குஞ் சிவமென்னுஞ்செம் பொருளின் தொடர்புடையது சைவம். அத்தகைச் சமயத்தின் காலவரை அளவிடற்பாலதன்று.

சமரச நிலை

சைவ சமயம் தொன்மையிற் சிறந்து விளங்கு தலைமட்டுங் கொண்டு, அதனைப் போற்றவேண்டுமென்று வலியுறுத்துவது அறிவுடைமையாகாது. மேன்மக்கள் தொன்மை கருதி ஒன்றைக்கொள்ளவும் மாட்டார்கள்; புதுமை கருதி ஒன்றைத் தள்ளவும் மாட்டார்கள். அவர்கள், ஒன்றை அறிவால் அளந்து ஆராய்ந்து, அதன் உண்மை காணவே முயல்வார்கள். ஆராய்ச்சிக்குக் கருவியாக நிற்பது தொன்மையதாயினுமாக; புதுமையதாயினுமாக வேண்டற்பாலது ஒன்றே. அது பொருளுண்மை. இதனைச் சைவ சமய சந்தானாசாரியருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள் தமது சிவப்பிரகாசமென்னும் அரிய நூலில்,

தொன்மையவா மெனுமெவையு நன்றாகா இன்று
தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியுமதன் களங்கம்
நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமய_சாரம்_1944.pdf/4&oldid=1628839" இலிருந்து மீள்விக்கப்பட்டது