பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி - 11

சோழர் காலச் சைவ நூல்களில் தலைசிறந்தது பெரிய புராணம். அந்நூல் இரண்டாம் குலோத்துங்கனது முதல் அமைச்சரான சேக்கிழார் பாடியது. அவர் முதல் அமைச்சர் ஆதலாலும், நாயன்மார் அறுபத்து மூவருள் சிலர் சேர - சோழ - பாண்டிய மரபினராதலாலும் வேறு சிலர் குறுநில மன்னராதலாலும் அவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தக்க சான்றுகள் கொண்டே தொகுத்தனர் என்று கருத இடமுண்டு. அந் நூலாசிரியர், பாடல்பெற்ற ஏறத்தாழ 300 கோயில்களையும் நேரிற் கண்டனர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. இவ்வளவு அரும்பாடுபட்டு அவர் செய்த பெரியபுராணம் பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகளையும் சைவம் வளர்ந்த நிலையையும் நன்கு விளக்குகிறது. அந் நூல் சோழர் காலத்தில் உண்டானது என்பதைக் கொண்டு, சோழர் காலத்தில் சைவ சமய நாயன்மார்கள் எவ்வாறு போற்றப்பட்டனர் என்பதை அறியலாம்.

நாயன்மார்கள் உருவங்கள் கோயில்களில் எடுப்பிக்கப்பட்டன; நாயன்மார்கட்கு விழாக்கள் நடைபெற்றன; அவர்கள் பாடல்கள் கோவில்களிற் பாடப்பட்டன என்பன போன்ற பல விவரங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களைக் கொண்டு நன்கறியலாம். பல்லவர் காலத்தில் இருந்த மடங்களை விடச் சோழர் காலத்தில் மடங்கள் மிகுதிப் பட்டன என்பதையும், அவை சைவ சமயத்தை எவ்வாறு வளர்த்துவந்தன என்பதையும் சோழர் காலக் கல்வெட்டுக்கள். உணர்த்துகின்றன. சைவசித்தாந்தம்

பல்லவர்காலத்தில் தோன்றிய திருமூலர்திருமந்திரம், தேவாரம், திருவாசகம் இவற்றிற் காணப்படும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் எவ்வாறு சோழர் காலத்தில் உருப்பெற்றன என்பதையும் பெரிய புராணம் நன்கு காட்டுகிறது. இங்ங்ணம் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி யடைந்து வந்த கருத்துக்களே, 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான போதம் முதலிய சைவ சித்தாந்த நூல்களாக வெளிவந்தன என்னலாம். 1. -

1. என்னுடைய M. O.L. ஆராய்ச்சி நூலான பெரிய புராண ஆராய்ச்சியைக் காண்க. -