பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்

மேலே குறிப்பிடப்பட்ட பல்லவருள் சமுத்ரகுப்தன் காலத்து விஷ்ணுகோபன் காஞ்சியை ஆண்டவன் என்பது முன்பே கூறப்பட்டது. இரண்டாம் குமாரவிஷ்ணு என்பவன் காஞ்சியை ஆண்டான் என்பது தெரிகிறது. நந்திவர்மன் விஜயகாஞ்சிபுரத்தை ஆண்டான் என்பது தெரிகிறது. சிம்மவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றி ஆண்டான் என்பது தெரிகிறது." பட்டியலிற் காணப்படும் மற்ற அரசர்கள் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களிலிருந்து பட்டயங்களை வெளியிட்டுள்ளதைக் காண, அவர்கள் காலங்களில் காஞ்சி, பல்லவர் ஆட்சியில் இல்லை என்று கூறலாம்."

அக்காலநிலை: களப்பிரர்

புத்ததத்தர் என்ற பெளத்த துறவியார் ஏறத்தாழக் கி.பி.5-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். அவர் சோழ நாட்டினர். அவர் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பெளத்த விஹாரத்தில் தங்கி அபிதம்மாவதாரம் என்ற நூலை எழுதினார். தாம் அதனை எழுதிய காலத்தில் நாட்டை அச்சுத விக்கந்தன் என்ற களப்ர குல அரசன் ஆண்டு வந்தான் என்று அவர் கூறியுள்ளார். சேர, சோழ, பாண்டியரைச்சிறைப்டுத்தித் தமிழகத்தை ஆண்டபேரரசன் என்று சில தமிழ்ச் செய்யுட்கள் அச்சுதக் களப்பாளன் என்ற ஒருவனைப் புகழ்கின்றன. இவன் புத்ததத்தர் குறித்த அச்சுதனாகலாம் என்று அறிஞர் கொள்கின்றனர். இவன் புத்ததத்தராற் குறிக்கப்பட்டுள்ளான். இவன் பாண்டிய நாட்டையும் பிடித்தாண்டவன் என்று மேற்சொன்ன தமிழ்ப் பாக்கள் கூறுகின்றன. 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு அளவரிய அதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்பிரன் என்னும் கலியரசன் கைக் கொண்டான்" என்று வேள்விக் குடிப் பட்டயம் விளம்புகிறது." இம் மூன்று குறிப்புக்களையும் நோக்க, புத்ததத்தர் குறித்த அச்சுதவிக்கந்தன் என்ற களப்ரகுல அரசன் ஏறத்தாழக் கி.பி.5-ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் தமிழகத்தைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இக் களப்பிர மரபினரிடமிருந்தே ஏறத்தாழக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் கடுங்கோன் என்ற அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்." ஏறக்குறைய அதே காலத்தில் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் களப்பிரர், சோழர் முதலியோரை வென்று காஞ்சியில் பல்லவ அரசனானான். இக் கூற்றுக்களை நோக்க, களப்பிரர் ஆதிக்கம் பல்லவ பாண்டிய நாடுகட்குப் பேராபத்தை உண்டாக்கியிருந்தன என்பதை அறியலாம். களப்பிரர் சிறந்த