பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 267 சுத்த மாயையும் அசுத்தமாயையும், ஆணவத்தோடும் கன்மத்தோடும் விரவாத நிலையும் விரவிய நிலையும் என்பனவன்றிப் பொருளால் வேறல்ல. ஆகவே, அவ்விரு மலங்களும் நீங்கிய காலத்தில் சகலர்க்கு உள்ள சூக்கும சரீரங்களும் பரசரீரங்களும் தூய சரீரங்களாகிய மாயேயமும், வைந்தவங்களுமாகிய துல சரீரங்களைத் தோற்றுவிக்கும். இதனால் அவர்கட்கு உருத்திரராயும் சிவராயும் வாழும் நிலையும் கைகூடும் என்பதும் அறியப்படும். மும்மலங்களும் வாசனையும் இன்றிப் பற்றறக் கழிந்தவுடன், பரமசிவனுடன் இரண்டறக் கலத்தலாகிய பெருமுத்திப் பயன் உண்டாவதாகும் என்பதும் அறிந்து தெளியப்படும். பாசங்களில் ஆணவமும் கன்மமும் நுண்பொருள் களாய்ப் புலப்படாது நிற்றலின், அவற்றின் நிலைகளை மாயையாகிய பருப்பொருளில் வைத்தே உணர்தல் வேண்டும். அதுபற்றியே தத்துவங்களின் இயல்பு இவ்வாறு விரித்துக் கூறப்பெறுகின்றது. விரிந்த நூல்களில் இதனை இன்னும் மிக விரிவாகக் காணலாம். (இ) ஐந்து மலங்கள் இப்படி ஒரு கருத்தும் உண்டு. ஆணவம், கன்மம், மாயை என மலங்கள் மூன்றே எனினும், உலகிற்கு முதற்காரணமாகிய மாயை காரணநிலை, காரிய நிலை என இருநிலைகளையுடையது. மாயை என்பதைக் காரண மாயையையே குறிப்பதாகக் கொண்டு அதன் காரியங்களை மாயேயம்’ என்று வேறொரு பெயரால் குறிப்பர். இப்பெயர் அசுத்தமாயையின் காரியத்திற்கே பொருந்தும். ஏனெனில் மயக்கும் தன்மையுடைமையால் ‘மயை’ எனப்படுவது அதுவேயாகலின் என்பதால். சுத்த மாயையும் மாயையே எனினும், அது மயக்கத்தைச் செய்யாமையால் விந்து, குடிலை முதலிய பெயர்களால் கூறப்பெறும் என்பது முன்னர்க்குறிப்பிடப் பெற்றது.