பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விடுபேற்றுக்கு வழிகள் (). நூல்கள் நுவலும் வழிகள் மும்மலங்கட்கு உட்பட்ட ஆருயிர்கள் அம்மலங் களின் சார்பில் பல பிறப்புகளை எய்தி பல நுகர்ச்சிப் பொருள்களை அடையும் இதனால் பல இன்ப துன்பங்களை நுகர நேரிடும். மேலும் அந்நுகர்ச்சிக்கு ஏதுவான செயல் களைப் புரியுங்கால் துன்பம் மிகுதியாயும் இன்பம் குறைவாயும் இருத்தலைப் பலகாலும் உணரும். இந்த உணர்ச்சியின் காரணமாக துன்பம் நீங்குதற்கும் துன்பம் கலவாத பெரிய இன்பத்தை அடைவதற்கும் வழி இல்லையோ என அவாவி நிற்கும். இங்ங்னம் அவாவும் நிலையை உயிர்க்குயிராய் நின்று அறியும் இறைவன் உணர்ந்து, அவ்வுயிர்களின் உணர்வு நிலைக்கேற்பச் சிலசில நெறிகளை இதுவே நன்னெறி, இதுவே நன்னெறி' என உணருமாறு உள்நின்று - அந்தர்யா மியாக நின்று - உணர்த்துவன். இங்ங்னம் சிலருக்கு உணர்த்தி யும், அவர்மூலம் அவரோடு ஒத்த பலருக்கு உணர்த்தவும் செய்வன், இவ்வழியில் தோன்றி நிலவி வருவனவே முதலும் வழியுமாய் மரபு நிலை திரியா மாட்சியினையுடைய மெய்ந் நூல்கள். இம்மெய்ந் நூல்களே வேதங்களும் சிவாகமங்களும் ஆகும்.