பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தத்துவ வாதம்

தருக்க மதம்


 தத்துவ வாதம் - இயற்கையே கடவுள் என்னும் சமயம் அல்லது கொள்கை.

தத்துவாத்துவா - தத்துவ வழி அத்துவா 6ல் ஒன்று.

தந்தி - கணபதி.

தந்தையர் - பிறப்பித்தோன், கற்பித்தோன், மணம் முடிப்பித்தோன், அன்னம் தந்தோன், ஆபத்துக்கு உதவினோன் என ஐவர்.

தந்திரம் - ஆகமம்

ததி - தயிர்

ததிநெய் - தயிர்நெய்,பரம்பொருள் தன்னை உணரும் அன்பர்கள் இடத்தில் தயிரின் கண் நெய் போல் விளங்கித்தோன்றுவான். பாசக் கட்டுடையவர்களுக்குப் பாலின் கண் நெய்போல் விளங்காமல் நிற்பான்.

ததீசி- பா.சிவமுனி.

தபனியம், தமனியம் - செம்பொன்.

தபனியன் - இரணியன், நரசிங்க மூர்த்தியால் இவன் கொல்லப்பட்டான்.

தபோதனர்கள் - சாக்கிரத்தில் அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகில் சர்வ சங்க நிவர்த்தி வந்தவர்கள். (சிசிசுப 287)

தம்மை உணரார் - தம்முடைய இயல்பை உணராத பிற சமயத்தவர். அவர்கள் பின்வருமாறு: உலகாயதர், புத்தர், சாங்கியர், மாயாவாதி, பாஞ்சராத்திரிகள், சிவவாத்துவித சைவர்.

தம்முதல் - இறைவன்.

தமி - தம்மை எல்லாம் உடைய முதல்வன் எ-டு தாம்தம் உணர்வின் தமிஅருள்(சிபோதுபா 5)

தமியோன் - பாசக் கூட்டத்தினின்றும் நீங்கீத் தனியே நிற்கும் நான்.

தமிழ் - 1) இயல், இசை, நாடகம் என மூன்று 2) இயல், இசை, நாடகம்,அறிவியல் என நான்கு தமிழ் நான்மறை - மூவர் தேவாரமும் திருவாசகமும்

தமிழ் முனிவர் -அகத்தியர்

தரணம் - கடத்தல்,

தரணி - உலகம், மருத்துவன்.

தரளங்கள் - முத்துகள்.

தர்ப்பணம் - கண்ணாடி காட்டல், வழிபாட்டுமுறைகளில் ஒன்று.

தராபதி-இறைவன், அரசன்.

தரா வலயம் - தரை+வட்டம் நிலவுலகு.

தரிசனம் - காட்சி. இறைவன் காட்சி.

தரிப்பது - தாங்குவது.

தரு - அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என 5.

தருக்கம்- அளவை, நியாயவாதம் அறிவினால் சாதிக்கப்படும் ஆராய்ச்சி.

தருக்க இயல் - அளவை இயல். சிந்திப்பதை முறைப்படுத்தும் நூல் எண்ணக் கோவை நூல்.

தருக்க மதம் - அளவையைச் சிறப்பாகக் கொள்வதால், அளவை மதம் ஆகும். பொருள்களின் இயல்பை நுட்பமாக ஆராய்வது. நியாயம், வைசேடிகம் என இரு பிரிவுண்டு. நியாய மதம் நையாயிகம்எனப்படும். நியாயம் பொருள்களை 16 வகையாகவும், வைசேடிகம் 7 வகையாகவும் பிரித்து ஆராயும் 'இறைவன் அளவையால் அறியப்படுவனே” என்பர் தருக்க மதத்தவர். இறைவன் அளவை

144