பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

அகராதித் துறை மேலை நாட்டில் பல வழிகளில் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அகராதி தொகுக்கப் பெற்றுள்ளது. தமிழில் இதுவரை பொதுவான அகராதிகளே வெளி வந்துள்ளன. இலக்கணச் சொல் அகராதி, மரபுத் தொடர் அகராதி போன்று சில வெளிவந்துள்ளன.

கணிப்பொறிக்குரிய சொற்களைத் தொகுத்து, கணிப்பொறி அகராதி, இன்டர்நெட் - மல்டிமீடியா சொற்களஞ்சியம் போன்றவற்றைக் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

தமிழர் தம் தத்துவமான சைவசித்தாந்தம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் தனித்துறையாகப் பயிலப்பெறுகின்றது. இதன் அடிப்படையாகப் பதினான்கு சாத்திர நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. இவை தவிர இவற்றுக் கெழுந்த சிவஞானபோத மாபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சித்தியார் அறுவர் உரை போன்ற பழைய உரைகள் போகப். பிற்காலத்தில் திருமுறை சாத்திர நூல்களுக்கெழுந்த பல உரைகள் இன்று வழக்கில் உள்ளன. இவற்றில் காணப்படும் கலைச் சொற்களைத் தொகுத்து இவற்றுக்கான விளக்கங்களைத் தொகுக்கும் முயற்சியே இந்த அகராதி தோன்றுவதற்குக் காரணம்.

இம் முயற்சியில் ஈடுபட்டு சிறப்பாக அகராதியைத் தொகுத்துள்ளவர் திரு. அ.கி.மூர்த்தி. எம்.ஏ. ஆவர். சமய, சாத்திர நூல்களில் ஆழமான பயிற்சியுடைய இவர் பல்வேறு நூல்களைப் படித்தறிந்து அரிய சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து உரிய விளக்கங்களை இணைத்து இதனை உருவாக்கியுள்ளார்.

சைவசித்தாந்தம் பயில்வார்க்கு இவ்வகராதி பெரிதும் பயன்படும். சாத்திர நூல்களில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் விரவப் பெற்றுள்ளன. கழக் நூல்களில் வடமொழிச் சொற்களைக் களைந்து அவற்றுக்கீடான தமிழ்ச் சொற்களைப்

iii