பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓட்டு

ஓலக்க மண்டபம்



ஓட்டு - இயக்கு, இயக்கம். எ.டு.ஓட்டு அற்று நின்ற உணர்வு பதி முட்டித் (திஉ 13).

ஓட்டற்று - போக்குவரத்தற்று, அசைவற்று.

ஓடாப்பூட்கை - குலையா மன உறுதி

ஓடிய தேர்-திருவாரூர் வாழ்ந்த மனுநீதிச் சோழன் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இறந்த பசுவின் கன்றுக்காகக் கொல்லுதல் எமன் தன் மகனைப் பிடித்து வருத்தாதபடி இருக்கவே பாவம் நீங்கும் இச்செயலை அவன் செய்தான், அறம் நிலை நாட்டினான் (போப50)

ஓதனம் - சோறு, எ-டு ஒழிவின்றி ஒதனமும் அறவுண்ண (சிசி பப 202).

ஓத்தல் - ஆராய்தல்,

ஓத்து- இயல், மறை எடு அகத்தியனுக்கு ஓத்து உரைக்கும். ஓதப் பட்ட விதி.

ஓதிய வாசுதேவர் - வாசுதேவராய்த் திருமால் துவாரகையிலே இருக்க, வியாக்கிர பாதமுனிவர் மகனாகிய உபமன்னியுமாமுனிவர் கயிலாயத்துக்குச் செல்ல இருந்தார்.அவரை வாசுதேவர் கண்டு அங்கே செல்லாமல் தன்னுடனேயே தங்கிக் காட்சியளிக்க வேண்டினார். உபமன்னயு முனிவர் குற்றமற்ற ஞானக்கண்ணாலே உரிய தீக்கை செய்து அவரைச் சிவ பக்தராக்கினார். வாசுதேவரும் ஞான நிறைவோடு அதனை ஏற்றுக் கொண்டார் (சிசி பப 287)

ஓதுவார் - கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடும் சைவ வேளாளர்.

ஓமம் - யாகம், வேள்வி, இதனைச் செய்ய நெருப்பு,நெய், சுருக்கு, சுருவம் ஆகியவை வேண்டும்.

ஓமக் கருவிகள் - நெருப்பு, நெய், சுருக்கு, சுருவம், குழி.

ஓமகுண்டம் - ஓமக்குழி

ஓமித்தல் - ஓமஞ்செய்தல்

ஓம்-ஓங்கார மந்திரம், பிரணவம்

ஓம் என்றான் உலகநாதன் -பிருகு முனிவர் சாபத்தாலே அஞ்சிப் பரமேசுவரனை நோக்கித் திருமால் தவஞ்செய்தார். பரமேசுவரனும் மனம் இரங்கி, “அஞ்சற்க உனக்கு வேண்டியது யாது” என்று கேட்டார். பிருகு முனிவர் சாபத்தைத் தீர்த்தருளத் திருமால் வேண்டினார். பரமேசுவரனும், "பிருகு என் அன்பர். நின் விருப்பம் நிறைவேறும்.” என்றார். அச்சாபத்தினாலே எடுக்கும் பிறப்பு தோறும் தன்னைக் காத்தருள வேண்டும் என்று இறைஞ்சினார். "அப்படியே நடக்கும்” என்றார் பரமேசுவரனும் (சிசி பப300).

ஓர்க்கும் - ஆராயும்.

ஓர்த்தல் - ஆராய்தல்

ஓர்ப்பான் - உணர்வான்.

ஓர்மையதாய் - ஒன்றாக நிற்பதாம்.

ஓரார் - உணரார். -

ஓரின்பத்து உள்ளான் - இறைவன்.

ஓருறுப்பு வணக்கம் - ஏகாங்க நமஸ்காரம் தலைமட்டும் குறைந்து வணங்கும் ஐவகை வணக்கங்களில் ஒன்று.

ஓலக்கம் - அவை,

ஓலக்க மண்டபம் - அவை மண்டபம், அரச மண்டபம்.

80