பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பெற்றுத் தமிழகத்தில் நிலவிய பொதுமையுடையதென்பது நன்கு புலனாதல் காணலாம்.

கணிச்சியென்னும் மழுப்படை சிவபெருமானுக் குரியது எனவும் அப்படையினால் நிகழ்த்தப்படும் ஒடுக்கத்தின் உயிர்களது வினை நுகர்ச்சி முடிவு பெறும் காலம் வந்துழி அம்முறையின் வழி நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் காலன் எனவும் முழுமுதற் கடவுளாகிய இறைவனுக்குரிய கணிச்சிப்படை காலனது தொழிற்கும் உறுதுணையாய் நிற்கும் எனவும் தமிழ் முன்னோர் கருதினர். உலகுயிர்கள் அனைத்தையும் பேருழிக் காலத்தில் தன் கண் ஒடுக்கிக் கொள்ளுதலால் மகா சங்காரணன் எனப்படும் சிவபெருமான் பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்துப் பாடலிற் காலக்கடவுள் எனப் போற்றப் பெற்றுள்ளமையும் இக்கருத்துப் பற்றியே யாகும்.

வினைக் கொள்கையும் மறுபிறப்பும்

உலகில் உடம்புடன் கூடிவாழும் உயிர்கள் கூற்றுவனால் உடம்பினின்றும் நீங்கிய நிலையில், அவ் வுயிர்கள் முன் உடம்பொடு கூடியிருந்த காலத்திற் செய்த நன்றும் தீதுமாகிய வினை காரணமாகப் பிறிதோ ருடம்பினைப் பெற்று மீளவும் பிறக்கும் என்பது தென்குமரி வடவிமயமாகிய எல்லையுட் பட்ட பாரத நாட்டில் வாழும் அனைவரும் தொன்றுதொட்டு உடன்பட்டுத் தம் வாழ்வியலிற் கடைப்பிடித்து வரும் பொதுக் கருத்தாகும். உடம்பொடு கூடி வாழும் மக்கட் குலத்தார் தாம் பெற்ற மனவுணர்வின் பயனாக எல்லாவுயிர்க்கும் நல்லனவே செய்தல் வேண்டும் என்பதும் எவ்வுயிர்க்குந் தீங்கு செய்தல் ஆகாது என்பதும் இவ்வுலகில் நல்லன செய்தோர் அதன் பயனாக வானுலகில் இந்திரன் முதலிய இமயவர் பதங்களைப் பெற்று இன்பம் நுகர்வர் என்பதும் அல்லன செய்தோர் அதன் பயனாக மீளுதற்கரிய நரகமாகிய நிரயத்தினை யடைந்து துன்பம் நுகர்வர் என்பதும் வினைப்பயனாகிய அந்நுகர்ச்சி முடிந்தபின்னர் எஞ்சிய வினையின் காரணமாக உலகில் மீளப்பிறப்பர் என்பதும் சங்ககாலத் தமிழ் மக்கள்