பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

433


என்பது மேற்குறித்த குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விளக்கவுரையாகும்.

உலகப்பொருள்கள் கட்புலனாகாதவாறு கண் னொளியைத் தடைசெய்து நிற்கும் புறவிருளும் அது போலவே நுண்பொருள்களை உள்ளம் உணராதவாறு உயிரின் அறவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளும் என இருளை இருவகையாகப் பகுத்துரைப்பர் பண்டைத் தமிழ்ச்சான்றோர். 'இருள் தூங்கு விசும்பு' (நற்றிணை 261) எனப் புறவிருளும் 'இருள்நீங்கியின்பம் பயக்கும் (திருக்குறள் 52) இருள்தீர்காட்சி (பெரும்பாண். 443) என அகவிருளும் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். உலகிற் புறத்தே காணப்படும் இருள் ஞாயிற்றின் ஒளிக்கதிர்களால் நீங்குமாறு போலவே, மக்களின் உள்ள்த்தே அறிவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளானது உயிர்க்குயிராய்த் திகழும் இறைவனது அருளொளியாகிய மெய்யுணர்வினால் நீங்கும் என்பது, "இறைவன் பொருள் சேர்புகழ் புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா” எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

சைவசமய சந்தானகுரவருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியார் தோற்றமில் காலமாக (அநாதியாக) நிலைத்துள்ள பொருள்களை,

“எகன் அநேகன் இருள்கருமம் மாயையிரண்டு

ஆக இவை.ஆறு ஆதியில்” (திருவருட்பயன் 5)

என ஆறாகப் பகுத்துக் கூறியுள்ளார். “உலகிற்கு முதல்வ னாகிய இறைவனும் எண்ணிறந்தனவாகிய உயிர்த் தொகுதியும், அவற்றின் அறிவை மறைத்து நிற்கும் ஆனவ மலம் எனப்படும் இருளும், உயிர்கள் மீளப்பிறத்தற்குக் காரணமாகிய கன்மமும் சுத்தம் அசுத்தம் எனப்படும் மாயை இரண்டும் ஆக இவை ஆறும் அநாதியே (தோற்றமில் காலமாக) உள்ள உள்பொருள்களாகும்” என்பது இக் குறட்பாவின் பொருளாகும். ஆன்மாக்களின் அறிவாற்றலைத் தடைசெய்து நிற்கும் அகவிருளை ஆணவம் எனவும் மலம் எனவும் வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும். ஆணவம்