பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

453


தத்துவக்கூறுகளாக உலகினைப் பகுத்தாராய்ந்து பயன் கொள்ளும் உணர்வுரிமையுடைய உயிர்கள் உள்பொரு ளாதலும் இங்ங்னம் வகைப்படுத்து ஆராய்தற்குரிய செயப்படு பொருளாகிய உலகம் உணர்வில்லாத உள்பொருளாதலும் தமிழ் முன்னோர் கண்ட தத்துவவுண்மைகளாதல் நன்கு தெளியப்படும்.

காணப்படும் இவ்வுலகம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்ட உள்பொருளேயென்பது சைவ சித்தாந்தம் கூறும் தத்துவக்கோட்பாடாகும். உலகிலனப் படைத்த முதல்வன் ஒருவன் உண்டென்பது,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து

கெடுக வுலகியற்றி யான்” (திருக். 1062)

எனவரும் திருக்குறளில் "உலகியற்றியான்’ என்ற தொடரால் உணர்த்தப்பட்டது. "உலகினைப் படைத்த இறைவன் இவ்வுலகின்கண் வாழ்வார்க்கு முயன்று தொழில்புரிந்து வாழ்தலையன்றிப் பிறர்பாற் சென்று இரந்து (யாசித்து) ஏற்று உயிர்வாழ்தலையும் ஒரு தொழிலாக விதித்திருப்பா னாயின் அக்கொடுந்தொழிலை விதித்த அவனும் இரப்போரைப் போன்று எங்கும் திரிந்து கெடுவானாக” என்பது இதன் பொருளாகும். இரத்தலின் இழிவினையும் வேறுதொழில் செய்யாது இரந்தே உயிர் வாழ்வோம் என்று வாழும் இரவலர் படுந்துயரத்தினையும் கண்டு வருந்திய திருவள்ளுவர், இவ்விழி நிலைக்கு இடனாக இவ்வுலகினைப் படைத்த இறைவனை வெகுண் டுரைப்பது போன்ற, மானங்கெட வரும் இரத்தலின் அச்சத்தைப் புலப்படுத்துவது இத்திருக்குறளாகும். இதன்கண் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் என்ற தொடரிலுள்ள வேண்டின்’ என்னும் வினையெச்சம் உலகியற்றியான் அங்ங்னம் வேண்டுவான் அல்லன் என்பதனையும் மக்கள் முயன்று தொழில்செய்து அறிவு திருவாற்றல்களால் உயர்வுபெறுதலே இறைவனது படைப்பின் நோக்கம் என்பதனையும் மக்கள் ஒரு தொழிலையுஞ் செய்யாது இரந்து உயிர்வாழ்வோம் என்று எண்ணும் இழிநிலை உலகினைப் படைத்த இறைவனது திருவுளக்குறிப்பிற்கு முரண்பட்ட தென்பதனையும் வற்புறுத்துங் குறிப்பினதாதல் ஆய்ந்துணரத் தகுவதாகும்.