பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

629


அறிவிற் பற்றும்படி அதனோடு இயைந்து ஆன்மபோதம் அடங்க நிற்றல். இம்முறையில் இறைவனைக் கண்டு வழிபடும் முறையினை,

“னிை லுயிர்ப்பை யொடுக்கியொண்சுடர்

ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந்தேத்துவார்க்கிட ரான கெடுப்பன அஞ்செழுத்துமே” (3.22.4)

எனத் திருஞானசம்பந்தரும்,

"உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனுந்திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே.” (4.75.5)

எனத் திருநாவுக்கரசரும் அருளிய திருப்பாடல்களால் இனி துணரலாம். இனி, இத்திருமத்திரத்தின் இரண்டாமடியில் விளக்கு என்றது, இறைவனது அருளொளியினை. ‘மெய்கிளரும் ஞானவிளக்குக் கண்டாய்” (6.23:2) எனவும், 'துண்டாவிளக்கின் சுடரனையாய் (திருவாசகம்) எனவும், 'ஒளிவளர்விளக்கே (9.1.1) எனவும் அருளாளர் இறைவனை விளக்காக அழைத்துப் போற்றியுள்ளமை காணலாம். மூன்றாமடியின் முதற்கண் விளக்கு என்றது, உயிரறிவினை. அவ்விளக்கை விளக்கும் விளக்காவது இறைவனருளாகிய சுடரொளி. அதனையுடையவர்கள் என்றது, அவ்வொளி உள்ளும் புறம்புந் தோன்றக் காணும் அருளாளர்களை. அப்பெருமக்கள் சோதியும் சுடரும் சூழொளி விளக்கும் ஆகிய அவ்வொளியினால் உள்ளும்புறம்பும் ஒருதன்மைக் காட்சியராய் விளங்கும் நன்ஞானம் பெற்றுடையராய் ஆணவ இருள் நீங்க ஈறில் பெருஞ்சோதியினிற் பிரிவறக் கலந்தொளிரும் சுடர் விளக்காகத் திகழ்வர் என்பார், "விளக்கை விளக்கும் விளக்குடையார்கள், விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே” என்றருளிச் செய்தார்.

சிவபூசை என்பது, பூ, நறும்புகை, விளக்கு, திருமஞ்சனம், திருவமுது முதலியன கொண்டு, பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும்