பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்பது கருத்து.

"ஆன்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் போதத்தை அணையும்” என்றார் மெய்கண்டதேவரும். இத்திருமந்திரம் எடுத்துக்காட்டுவமை என்னும் அணியமைந்ததாகும்.

எல்லாஞ்சிவனென்ன நின்ற நிலையைத் தரிசிக்குமாறு உணர்த்துவது,

“மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே (2290)

எனவரும் திருமந்திரமாகும்.

மரத்தாற் செய்யப்பட்ட மதயானையின் வடிவ மானது தொழில் வன்மையால் தன்னை உயிருடைய யானைபோலக் காட்டி மயக்கித் தனக்கு முதற்காரணமாகிய மரத்தின் தன்மையினை மறைத்து நின்றது. அதன் மெய்ம்மைத் தன்மையைக் கூர்ந்து நோக்குவார்க்கு முன்பு மெய்ம்மையுடையது போன்று காணப்பட்ட யானையின் தோற்றம், ரத்தினுள் மறைந்து போயிற்று. அதுபோல, நில முதலாகக் காணப்படும் பூதகாரியமாகிய உலகத் தொகுதி தனக்குப் பற்றுக்கோடாகிய பரம்பொருளின் மெய்ம்மைத் தன்மை தோன்றாதபடி மறைத்துத் தானே மெய்ப்பொருள் என்பது போன்று விரிந்து தோன்றுகின்றது. என்றும் உள்ளதாகிய மெய்ப்பொருள் எதுவென்று உண்மையான் நோக்குவார்க்குப் பரம்பொருளின் வியாபகமே மேற்பட்டுத் தோன்றுதலால் இப்பிரபஞ்சம் அசத்துப் பொருளாய்ச் சத்தாகிய பரம்பொருளினுள் அடங்கிவிடும் என்பது இத்திருமந்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது.

அசத்தாகிய உலகப் பொருளின் வழி நின்று அதன் புறத்தோற்றமே காண்பார்க்கு அதன் உள்ளீடாகிய பரம்பொருள் காணப்பெறாது. சத்தாகிய பரம்பொருளின் அருள்வழி நின்று உலகின் உள்ளீடாகிய மெய்ம்மையினைக்