பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

சைவ சமய குரவ்ர் எனப்போற்றப்பெறும் நால்வருள் காலமுறைப்படி நாலாமவராக வைத்து எண்ணப்பெறுபவர் திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசகராவர். அடிகள் தமக்கு முன்னுள்ள திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவரும் அம்மூவர்க்கும் காலத்தால் முற்பட்ட திருமூலநாயனாரும் கொண் டொழுகிய சைவசித்தாந்தம் எனப்படும் சிவநெறிக் கொள்கையினையே மேற்கொண்டொழுகியவராவர். இச்செய்தி திருமந்திரமாலையிலும் மூவர் தேவாரப் பதிகங்களிலும் உள்ள தொடர்களும் கருத்துக்களும் அடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவையாகிய அருள்நூல்களில் அவ்வாறே எடுத்தாளப் பெற்றிருத்தலால் இனிது விளங்கும்.

திருவாசகத்தில் பதி பசு பாசம் என்னும் முப்பொருள் பேசப்பட்டுள்ளது. பதி - இறைவன், பசு - ஆன்மா, பாசம் - உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை.என்னும் மும்மலப்பிணிப்புக்கள். அவற்றுள் மாயையின் காரியமாகிய உடல் கருவி உலகுநுகர்பொருள் என்னும் மாயேயத்தையும், இறைவனது சத்திகளுள் ஒன்றாகிய திரோதாயி (மறைப்புச் சத்தி)யையும் வேறுபிரித்து எண்ணி மலங்கள் ஐந்து எனக் கூறுதலும் உண்டு. இவ்வாறு மும்மலம் எனவும் ஐம்மலம் எனவும் வழங்கும் சைவ சித்தாந்தக் குறியீடுகளும், இருவினை யொப்பு முதலிய நுண்பொருள்களும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளன. இக்குறிப்புக்களை உற்றுநோக்குங்கால் திருவாதவூரடிகள் திருமூலர் அருளிய சைவசித்தாந்தத் தத்துவக்கொள்கைகளை மேற்கொண்டொழுகிய செம்புலச் செல்வர் என்பது நன்கு துணியப்படும்.

‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க. (திருவண்டப் பகுதி) எனவரும் திருவாசகத்தொடர் உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கும் ஒப்பற்ற முழுமுதற்கடவுள்