பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் ஹரிஜன்

மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர்” என்று கூறினார்.

மகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது?” என்றார். “திருவாடானையில்” என்றேன் நான் சுருக்கமாக, “இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார்.

காந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா அச்சா” என்று சொல்லி “நஷ்டம் வராமல் நடத்துவாயா?” என்று கேட்டார்.

அதற்கு ராஜாஜி, “இவரும் உங்களைப் போல வைசிய சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அதனால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்.” என்றார். உடனே மகாத்மாஜி “அச்சா” என்று கூறி இப்போதே, தமிழ் ஹரிஜன் துவக்க விழா நடத்தி விடலாமே, எனக்கு 10 நிமிஷம் ஓய்விருக்கிறதே?” என்றார். எனக்குக் கையும் காலும் ஓடவில்லை.

ராஜாஜி தலைமையில் காந்திஜியே ‘தமிழ் ஹரிஜன்’ பத்திரிகையைத் துவக்கும் முதல் நடவடிக்கையாக, ‘தமிழ் ஹரிஜன்’ என்று தமிழில் எழுதித்துவக்கி வைத்தார். நான் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டு நன்றி கூறினேன். எப்படி நன்றி கூறினேன் என்று நினைக்கிறீர்கள். காந்தியடிகள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து அவர் பாதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.