பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாடோடியாக நடித்தேன்

பிரபல எழுத்தாளர் ‘நாடோடி’ அவர்களை பெங்களுரில் பாரதி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதியைப் பெற்று வருவதற்கு கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

புறப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் புறப்பட இயலவில்ல்ை: ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிவிடக் கூடாதே என்று கல்கி என்னைப் பெங்களுருக்குப் போகும்படி கேட்டுக் கெண்டார்.

நாடோடி பெயரால் ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கட்டிலே நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. பெங்களுர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேசன் வந்ததும் சிலர் மாலையும் கையுமாக ஓடிவந்தனர்.

‘நாடோடி’ என்ற பெயர் எழுதியிருந்த ரயில் பெட்டியைக் கண்டுபிடித்து அதன் அருகில் ஓடி வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய என்னைக் கண்டதும், “நாடோடி வாழ்க” “வாழ்க” என்று கோஷம் போட்டு வரவேற்று மாலை அணிவித்தார்கள். நானும் புன்னகையுடன் மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டேன்.

நான் யார் என்பதை அவர்களிடம் அப்போது சொல்லிக் கொள்ளவில்லை. அப்படியே எல்லோரும் என்னை ‘நாடோடி’ என்றே நினைக்கும்படி மாலைவரை சமாளித்துக் கூட்டத்தில் விஷயத்தை உடைத்துச் சபையைத் திகைக்க வைக்க வேண்டு மென்பது என் திட்டம்.