பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

113



என்னை வரவேற்று கூட்டிக்கொண்டு போனவர்கள் பெங்களூர் காந்தி நகரில் ஒரு வீட்டில் இறக்கினார்கள். அந்த வீடு திரு. சாமி என்பவருடையது. திரு. சாமி அவர்களின் புதல்வர்கள் மூன்றுபேர், புதல்வியவர் ஐந்து பேர். எல்லோரும் உயர்ந்த படிப்பு படித்தவர்கள். ‘கல்கி'யின் விசிறிகள்.

என்னை நாடோடி என்று நினைத்துக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு பிரமாதமாக உபசாரம் செய்தார்கள். என்னுடைய நகைச்சுவை வெடிகளைக் கேட்டு, சிரி சிரி என்று சிரித்தார்கள். ‘நாடோடி’ எழுதிய பல விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

எனக்கு அவைகள் எங்கே ஞாபகத்திலிருக்கும்? ஆனால் நான் சமாளித்து, மழுப்பி ஒரு வழியாக கூட்டத்திற்குப் போகும்வரை ‘நாடோடி'யாகவே நன்றாக நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

மாலையில் கூட்டம் துவங்கியது. எல்லோரும் என்னை ‘நாடோடி’ என்று நினைத்தே பலவாறாகப் பேசினர். பேசினர், அப்படிப் புகழ்ந்து பேசினர். எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்கு ரூ.2000/- கொடுத்தார்கள். நிதியைப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

கடைசியில் என் முறை வந்தது. சுமார் ஒரு மணிநேரம் நகைச்சுவை வெள்ளத்தில் கூடியிருந்தவர்களை மிதக்க வைத்து இப்போது சபை என் கைக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன்.

நான் இன்னும் நாடோடியாகவே பேசிக்கொண்டிருந்தேன். கடைசியாக சபையோரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். “நான் இப்போது என் பேச்சை முடிக்க விரும்புகிறேன்” முடிக்கு முன்பு ஒரு உண்மையச் சொல்ல விரும்புகிறேன். அந்த உண்மையை நீங்கள் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஆகா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

சொந-8