பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்னையின் பிரிவு

1945ஆம் ஆண்டு சென்னை தியாகராயநகர் நானா ராவ் நாயுடு தெருவில் 6-ம் எண் இல்லத்தில் நான் குடியிருந்த சமயம். எனக்கு மிகவும் வேண்டியவர்களான பெங்களூர் சுவாமி அவர்களின் மூத்த புதல்வன் வேலுவிற்குத் திருமணம் செய்யப்பெண் பார்க்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.

நானும் பல இடங்களில் பெண் பார்த்து. கடைசியில் அடையாறு ஒளவை இல்லம் சென்று திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன்.

திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் என்னிடம் மிகவும் பிரியமுடையவர்கள். அடிக்கடி என்னை ஒளவை இல்லத்திற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றும்படி செய்வார்கள்.

என் நகைச்சுவைப் பேச்சுகளைக் கேட்டு மாணவிகள் கலகலவென்று சிரிப்பதை மிகவும் விரும்புவார்கள். வாழ்க்கையில் துன்பத்தையே கண்ட மேற்படி மாணவிகள் ஒரு மணி நேரம் அம்மாதிரி சிரித்துக் குதூகலமாக இருப்பது திருமதி ரெட்டி அவர்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது. அதனால் என்னை அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஆகவே அவர்கள் எனக்காக சிரத்தை எடுத்து ஒளவை இல்லத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்தார்கள். பரஸ்பரம் சம்மதம் தெரிவித்ததும்