பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

125



“தேச சேவைக்குத் தயார் ! காங்கிரஸ் தலைமைப் பதவி வகிப்பது சிரமமாயிருந்தால் தந்தியடிக்கவும்; உடனே புறப்பட்டு வருகிறேன்! “ என்று குறிப்பிட்டிருந்தாராம். ஜவஹர்லால்ஜி யிடமிருந்து பதில் வந்ததாம்.

“தற்சமயம் இந்தியாவுக்குச்சேவை சீனப் போர்க்களத்தில் செய்யவேண்டும். உடனே புறப்பட்டு போகவும்” என்பதுதான் அந்தப் பதில்.

இதைப் பார்த்ததும் கல்கிக்கு கோபம் கோபமாய் வந்ததாம். உடனே வெயிஸ்ட் கோட்டையும் காந்திக் குல்லாவையும் எடுத்தெறிந்து விட்டுத் தலையில் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டாராம். கறுப்புக் கண்ணாடியும் வாங்கி மாட்டிக் கொண்டாராம். பின்னர் நமது சொந்த மாகாணத் தலைவர் ராஜாஜிக்குக் கடிதம் எழுதினாராம்.

“தேசத்திற்காக உயிரைவிடக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டேன். எவ்விடத்தில் ஆரம்பிக்கலாம்?” என்று யோசனை கேட்டிருந்தாராம்.

“கள்ளுக்கடையில் ஆரம்பிக்கலாம். ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்தால், ஒன்பது தடவை உயிரை விடுவதைவிட அதிகப்பலன் உண்டு என்று ராஜாஜி பதில் எழுதினாராம்.

“இதென்ன பிரமாதம்? ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்து ஒன்பது தடவை தேசத்திற்கு உயிர்விடுவோம்” என்று தீர்மானித்துக் கொண்டு கல்கி அவர்கள் திருச்செங் கோட்டுக்கு ராஜாஜியிடம் போய்ச் சேர்ந்தாராம்.

ராஜாஜி இவரைப் பார்த்தவுடன் “ஓ நீங்கள்தானா தேசத்திற்காக உயிரைவிடக்கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்?