பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

சொன்னால் நம்பமாட்டீர்கள்


உம்மிடம் உயிர் இருப்பதாகவே தெரியவில்லையே; பின் எப்படி அதை விடப் போகிறீர்?” என்றாராம்.

உடனே கல்கி, “அதுவா? ரயிலில் பஸ்ஸில் வண்டியில் வரும்போது பத்திரமாக இருக்கவேண்டுமென்பதற்காகப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிப் பெட்டியிலிருந்து சில துண்டுப் பிரசுரங்கள், சின்னப் புத்தகங்கள் முதலியவற்றை எடுத்து வெளியில் போட்டாராம்.

ராஜாஜி அவற்றைப் படித்துவிட்டு “பேஷ் இதை நீர் உம்முடைய உயிர் என்று சொன்னது சரிதான்! “ என்று மெச்சிவிட்டு அதைப்போல நிறைய எழுதும்படி கல்கியைத் தூண்டினாராம்

கல்கி தமிழ் எழுத ஆரம்பித்தார்.

அடடா தமிழ்மொழிக்கு யோகமல்லவா பிறந்து விட்டது!

கல்கியின் எழுத்துப் பைத்தியத்தை ராஜாஜி போலவே ஆசிரியர் திரு.வி. கலியாணசுந்தரமுதலியாரும் வளர்த்து வந்தார்.

“தமிழ் நாட்டில் பலர் செய்வதுபோல என்னுடைய தமிழ் நடையைக் காப்பி அடித்துக் கெட வேண்டாம்; உன் போக்கிலேயே செல்” என்று திரு.வி.க.அவர்கள் கல்கிக்கு போதனை செய்தார்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழ் மக்களாகிய நாம் மிஸ்டர் வாரன் என்னும் ஆங்கில துரை மகனாருக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம், ஏனெனில் கல்கியைத் தமிழ் எழுத்தாளராக ஆக்கியதற்கு முக்கியப் பொறுப்பாளி அவர்தான்!