பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சொன்னால் நம்பமாட்டீர்கள்


தலைவர் காமராஜ் அவர்கள் வீட்டிலிருந்து. உடனே வரும்படி எனக்கு போன் வந்தது. போனேன். அங்கு சுமார் இருபது குடும்பத்தினர். வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கூடியிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் தலைவர் காமராஜ், “இவங்கள்ளாம் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் திராவிடக் கழகக்காரர்களின் குடும்பத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கார்பொரேஷனிலும், அரசாங்கத்திலும் வேலை செய்பவர்களாம். தண்டிக்கப்பட்டால் வேலை போய்விடுமாம். அந்தப் பிள்ளைகளை நம்பித்தான் இவர்கள் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள்.”

இனிமேல் இம்மாதிரி நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்கிறார்கள். முதலமைச்சர் குமாரசாமி ராஜாவைப்பார்த்தார்களாம். அவர் என்னைப் போய் பார்க்கும்படி சொன்னாராம். சம்பந்தப்பட்டவர் தாங்கள். ஆகவே தங்களைக் கேட்காமல் எதுவும் நான்சொல்லக் கூடாதல்லவா? அதனால்தான் கூப்பிட்டு விட்டேன். “என்ன, மன்னிச்சு விட்டுவிடலாமா?” என்று மடமடவென்று கேட்டார் தலைவர் காமராஜ்.

“சரி, இனிமேலாவது காங்கிரஸ் தொண்டர்களைக் கேவலப் படுத்தாமல் இருந்தால் போதும்” என்றேன். காமராஜ் அவர்களின் கட்டளைப்படி கலாட்டா செய்த தோழர்கள் இரவே விடுதலை செய்யப்பட்டார்கள். மறுநாள் காலை. மயிலாப்பூர்திராவிடக்கழக பிரமுகர் லோகநாதன் அவர்கள் என் வீட்டிற்கு வந்து நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதே லோகநாதன் சில ஆண்டுகளில் காங்கிரசில் சேர்ந்து எனது நெருங்கிய நண்பராக இறக்கும் வரை இருந்தார். காமராஜரின் பக்தராகக் கடைசி வரை இருந்தார். காமராஜரிடம் அவர் பக்தி கொள்ளக் காரணமாக இருந்தது. நான் மேலே குறிப்பிட்ட சம்பவமும் காமராஜ் அவர்களின் மன்னிக்கும் குணமுமேயாகும்.