பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காந்தி தரிசனம்

காரைக்குடியில் எனது சிறியதாயார் உமையாள் ஆச்சி அவர்கள் வீட்டில் தங்கிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 10 இருக்கலாம்.

எனது சிறிய தாயார் அவர்கள், தேசபக்தர் திரு. சா. கணேசன் அவர்களின் சிறிய தகப்பனார் அவர்களின் மனைவி ஆவார். அதனால் அவர்கள் எல்லோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.

அந்த வீடு எப்போதும் ‘ஜே ஜே’ என்றிருக்கும். தேசத் தொண்டர்கள் வருவதும் போவதும் திரு. சா. கணேசனைக் கண்டு பேசுவதுமாக இருப்பார்கள். எப்போதும் என் காதில் ‘காங்கிரஸ்’ என்றும் காந்திஜி என்றும் கேட்டுக்கொண்டேயிருக்கும். என் கண்கள் தேசபக்தர்களையும், கொடியையும் கதரையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருக்கும்.

என்னையறியாமலே நான் ஒரு காந்தி பக்தனாகவும், காங்கிரஸ் தொண்டனாகவும் மாறிக்கொண்டே வந்தேன். இந்த நிலையில் மகாத்மா காந்தி காரைக்குடிக்கு வருவதாக ஒரே பரபரப்பாக இருந்தது.

என் சிறிய தாயார் வீட்டின் முன் ஒரு திறந்த (டாப் இல்லாத) கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டு நின்றது. அதில்தான் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப்போவதாகச் சொன்னார்கள்.

எனக்கு ஒரே துடிப்பு, காந்திஜியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம். என் சிறிய தாயார் பல முறை